காய்கனிகளில் ‘சீப் அண்டு பெஸ்ட்’ வகையைச் சேர்ந்தது பப்பாளி. இருப்பினும் நம்மில் பலர் அதை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. பப்பாளியை ஒதுக்குவதால் நாம் அதன் ஆரோக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும். வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு செய்து அசத்துங்கள். இது கலந்த சாதத்துக்கும் சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
**என்ன தேவை?**
பப்பாளிக்காய் – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
ஊறவைத்த வேர்க்கடலை – 150 கிராம்
தேங்காய் – ஒரு மூடி
பச்சை மிளகாய் – 6
சீரகம் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**தாளிக்க:**
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளவும். குக்கரில் வேர்க்கடலை, நறுக்கிய பப்பாளிக்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். பின்பு அதில் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு, தாளிக்கக்கொடுத்ததைத் தாளித்து இறக்கினால், சுவையான பப்பாளிக்காய் வேர்க்கடலை பால் கூட்டு தயார்.
[நேற்றைய ரெசிப்பி: பப்பாளிப்பழ மில்க் ஷேக்](https://minnambalam.com/k/2020/04/09/3)�,