கிச்சன் கீர்த்தனா: பச்சைப்பயறு உருண்டைக் குழம்பு

Published On:

| By Balaji

நம் அன்றாட உணவில் கட்டாயம் இடம்பெறுவது குழம்பு. ‘தினமும் குழம்பு சாதமா?’ என்று உதடு பிதுக்குபவர்கள்கூட, அதில் சுவையும் மணமும் தூக்கலாக இருந்தால்… ‘ஒன்ஸ்மோர்’ கேட்டு ‘அடுத்த ரவுண்ட்’டுக்குத் தயாராகிவிடுவார்கள். அப்படிப்பட்ட குழம்பே, இந்த பச்சைப்பயறு உருண்டைக் குழம்பு.

**என்ன தேவை?**

பச்சைப்பயறு – ஒரு கப்

துவரம்பருப்பு – 4 டீஸ்பூன்

பாசிப்பருப்பு – 4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – ஒன்று

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு

கடுகு – கால் டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – கால் கப்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

பட்டை – சிறு துண்டு

பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பூண்டு – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – ஒன்று

தக்காளி – ஒன்று

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 50 கிராம் (தோலுரித்து நறுக்கவும்)

புளி – அரை நெல்லிக்காய் அளவு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

**எப்படிச் செய்வது?**

பச்சைப்பயறை மூன்று – நான்கு மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து உப்பு, பச்சைப்பயறு சேர்த்து சற்றுக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்து இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும். தேங்காய்த் துருவல், சீரகம், சோம்பு, புளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், பட்டை, கறிவேப்பிலை, மீதமுள்ள வெங்காயம் தாளிக்கவும். சிறியதாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்து, அடுப்பை சிறுதீயில் வைத்து மூன்று – நான்கு நிமிடங்கள் வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்ததும் வேகவைத்த உருண்டைகளைச் சேர்க்கவும். அடுப்பை சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியும்போது இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

**குறிப்பு:** பச்சைப்பயறு உருண்டைகளை வேகவைக்காமல் குழம்பில் போட்டால் கரைந்துவிடும்.

[நேற்றைய ஸ்பெஷல்: காலை உணவு கட்டாயம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/02/8)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share