கிச்சன் கீர்த்தனா: நாடன் கூந்தல் (கடம்பா மீன்) ரோஸ்ட்

Published On:

| By Balaji

நியாண்டர்தால் மனிதன் இருந்த காலத்திலேயே மீன் உணவு வழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எலும்பும் முள்ளும் தோலுமற்ற ரப்பர் மாதிரி இருக்கும் இந்த நாடன் கூந்தல் (கடம்பா) மீனைத் தின்றால் கோடிக்கொடுத்தாலும் தகும் என்பார்கள். நகர்ப்புறங்களில் மிக அரிதாகக் கிடைக்கும் இந்த மீன், அனைவருக்கும் ஏற்றது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடல்புறப் பகுதிகளில் கர்ப்பிணிகளுக்கு கடம்பா மீன் ரோஸ்ட் மற்றும் சுறாப்புட்டு செய்து தரும் வழக்கம் உள்ளது.

**என்ன தேவை?**

கடம்பா மீன் – கால் கிலோ

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று (சிறியது)

இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயத்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

மீனைச் சுத்தம் செய்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு புரட்டி அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்துச் சிவக்கும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். மீன் கலவையைச் சேர்க்கவும். கூடுதலான தீயில்வைத்து வதக்கவும். ஐந்து – ஏழு நிமிடங்கள் வைத்திருந்து பின் மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் வற்றியதும் வெந்தயத்தூள் சேர்த்து மீனை நன்கு சுருள வதக்கி இறக்கவும்.

குறிப்பு: மீன் வதக்கும்போது தண்ணீர் சேர்க்கக் கூடாது. மீன் தண்ணீர்விட்டு வேகும்.

[நேற்றைய ரெசிப்பி: கறி மீன் பொளிச்சது](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/18/1)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share