விதவிதமான பலகாரங்களும் பட்சணங்களும் இருந்தாலும் லேகியம் இல்லாத தீபாவளியா? அனுபவத்தையும், அன்பையும் அடிப்படையாக வைத்து மிகவும் சிரத்தையுடன் தயாரிக்கப்படும் தீபாவளி லேகியத்தை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு வழங்குங்கள். ஹெல்த்தி தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
**என்ன தேவை?**
சுக்கு – 50 கிராம்
சித்தரத்தை – 25 கிராம்
ஓமம் – 10 கிராம்
சீரகம் – 25 கிராம்
கண்ட திப்பிலி – 25 கிராம்
அரிசி திப்பிலி – 25 கிராம் (இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்),
வெல்லம் – கால் கிலோ
இஞ்சி – ஒரு பெரிய துண்டு
நல்லெண்ணெய் – 50 மில்லி
நெய் – 50 கிராம்.
**எப்படிச் செய்வது?**
சுக்கு, சித்தரத்தை, ஓமம், சீரகம், கண்ட திப்பிலி, அரிசி திப்பிலி ஆகியவற்றை வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, சாறு எடுக்கவும். இதனுடன் பொடித்த வெல்லம் சேர்த்து அடுப்பில் வைத்து கரையவிட்டு, அரைத்துவைத்திருக்கும் பொடியை தூவிக் கிளறி, இறுகியதும் அடுப்பை நிறுத்திவிடவும். கொஞ்சம் ஆறியதும் நெய்யும், நல்லெண்ணெயும் சேர்த்துக் கிளறி எடுத்து வைக்கவும். தேவைப்படும்போது, இதிலிருந்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிடவும்.
[நேற்றைய ரெசிப்பி: முட்டை கொத்து பரோட்டா](https://minnambalam.com/k/2020/11/12/1)�,