‘தடை உத்தரவு நேரத்தில் எல்லா பொருட்களும்தான் கிடைக்குது. ஆனா, யானை விலை, குதிரை விலையா இருக்கு. எதை வாங்கறது, எதை வெச்சு சமைக்கிறதுன்னு தெரியலை’ என்று புலம்புபவர்களுக்கு உதவும் இந்த தக்காளி ஆம்லெட். வீட்டில் உள்ள குறைவான பொருட்களை வைத்து நிறைவாக செய்து அசத்தலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆம்லெட்டை விரும்பி சாப்பிடுவார்கள்.
**என்ன தேவை?**
கடலை மாவு – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
தண்ணீர் – ஒரு கப்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
**எப்படி செய்வது?**
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும். இதில் தண்ணீர் சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும்.
ஒரு தவாவைச் சூடாக்கி, சிறிதளவு எண்ணெயைத் தடவி, கடலை மாவு கலவையை ஆம்லெட் போல் ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும் மறுபுறம் புரட்டி ஒரு நிமிடம் வேகவிடவும். முட்டை இல்லாத சைவ ஆம்லெட் தயார். இதை சட்னி அல்லது கெட்சப் உடன் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: முட்டைகோஸ் ஆம்லெட்](https://minnambalam.com/k/2020/04/07/3)�,