கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி சர்க்கரைவள்ளிக்கிழங்கு பணியாரம்

Published On:

| By admin

ரம்பத்தில் ஜாவாவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதால், இது ஜாவா அரிசி (ஜவ்வரிசி) எனப்பட்டது. தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல சிறிய உருண்டைகளாக்கி ஜவ்வரிசியாக்கப்பட்டது. இந்தியாவில் பெரும்பாலும் மரவள்ளிக்கிழங்கிலிருந்தே தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சேர்த்துப் பணியாரம் செய்து அசத்தலாம்.
**என்ன தேவை?**
ஜவ்வரிசி – ஒரு கப்
துருவிய சர்க்கரைவள்ளிக்கிழங்கு – ஒரு கப்
பொடித்த வேர்க்கடலை – அரை கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
சீரகம் – ஒரு டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
ஜவ்வரிசியைக் கழுவி, தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். இதனுடன் நெய் தவிர, மற்ற பொருள்கள் அனைத்தையும் சேர்த்து மாவாகப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை பணியாரம் போல செய்து கொள்ளவும். பணியாரக்கல்லைக் குறைவான தீயில் வைத்து சூடாக்கவும். ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு நெய் தடவவும்.
பிறகு செய்து வைத்திருக்கும் பணியாரங்களை பணியாரக்குழிகளில் வைத்து, மூடியால் மூடி குறைவான தீயில் பணியாரங்களை மூன்று நிமிடங்களுக்கு வேகவிடவும். மூன்று நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்தால், பணியாரங்கள் பந்துபோல உப்பி வந்திருக்கும். இப்போது பணியாரங்களைத் திருப்பிவிடவும்.
பிறகு அவற்றின் மேல் இன்னும் கொஞ்சம் நெய்விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். அப்போதுதான் பணியாரங்கள் பொன்னிறமாக மொறுமொறுப்பாக வரும். பணியாரங்கள் சரியான பதத்துக்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். தயிர் அல்லது பச்சை சட்னியுடன் பணியாரங்களைப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி உருளைக்கிழங்கு டோனட்](https://minnambalam.com/public/2022/02/07/3/sago-potato-donut)**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share