சிறுதானிய உணவுகளைத் தினமும் சமைக்கக் கொஞ்சம் திட்டமிடலும், மெனக்கெடலும் இருந்துவிட்டால் போதும்… அரிசி உணவுக்கு மாற்றாக சிறுதானியங்களைப் பயன்படுத்தி வெரைட்டியான, சுவையான உணவு வகைகளைச் சமைக்க முடியும். நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பவர்களுக்கும் சிறுதானிய உணவுகள் ஏற்றவை. சிறுதானியங்களில் உள்ள நுண்ணூட்டச் சத்துகளும் நார்ச்சத்தும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். சில மூலிகைகளையும் இவற்றுடன் சேர்த்துச் சமைத்து உண்டால், என்றும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க முடியும்.
**என்ன தேவை?**
சுத்தம் செய்த நாட்டுச்சோளம் – ஒரு கப்
இட்லி அரிசி – கால் கப்
உளுந்து – 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 3
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
நாட்டுச்சோளம், இட்லி அரிசி, உளுந்து அனைத்தையும் அலசி, ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து, மூன்று மணி நேரம் புளிக்க விடவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதக்கியவற்றையும், கொத்தமல்லியையும் மாவில் கொட்டிக் கலக்கி, பணியாரக்கல்லில் ஊற்றி சுட்டெடுத்தால், சூப்பரான சோளப் பணியாரம் தயார். கறிவேப்பிலை சட்னி இதற்கேற்ற சைடிஷ்.
[நேற்றைய ரெசிப்பி: சோள தக்காளி ஊத்தப்பம்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/05/5)�,