சில நேரங்களில் மெயின் டிஷ்ஷுக்குத் தோதாக சைடிஷ் அமையாது. அப்படிப்பட்ட நேரத்தில் இந்த செளசெள துவையலைச் செய்து அசத்தலாம். பெங்களூர் கத்திரிக்காய் என்றும் அழைக்கப்படும் செளசெள தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும். ரத்த அழுத்தத்தைச் சீராக்கும், பருமனைக் குறைக்கும். தசைப் பிடிப்பைத் தடுக்கும் என்று இந்தத் துவையலுக்கு நிறைய பலன்கள் உண்டு.
**என்ன தேவை?**
பிஞ்சான செளசெள – 1
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
**எப்படிச் செய்வது?**
செளசெளவைத் தோல் நீக்கி உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டு கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். இட்லிப்பானையில் நீர்விட்டு இட்லித்தட்டில் செளசெள துருவலை உப்பு சேர்த்து நீர்விடாமல் வைத்து இட்லிப்பானை மூடியால் மூடி, 8 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேக விடவும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். வறுத்தவற்றை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி, பிறகு வெந்த செளசௌ சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். செளசெள துவையல் தயார். (இதற்கு செளசெளவில் உள்ள தண்ணீரே போதும். நீர்விட்டு அரைக்கத் தேவையில்லை.) இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுச் சாப்பிடலாம்.
[நேற்றைய ரெசிப்பி: கேரட் துருவல்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/02/3)�,