கிச்சன் கீர்த்தனா: சுக்கு குழம்பு!

Published On:

| By Balaji

அஜீரணம், வாய்வுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற சுக்கு குழம்பை வாரம் இருமுறை செய்து சாப்பிடலாம். இப்போது இதன் செய்முறையைப் பார்ப்போம் வாங்க.

**தேவையான பொருட்கள்:**

சுக்கு – ஒரு சிறிய துண்டு

மிளகு – 2 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கடுகு, உளுந்தம் பருப்பு – தலா அரை டீஸ்பூன்

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

சின்ன வெங்காயம் – 200 கிராம்

தக்காளி – 2

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

**செய்முறை:**

புளியை நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். தக்காளி, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய்விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

சின்ன வெங்காயம் சிறிது வதங்கியதும் இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் புளிக்கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான சுக்கு குழம்பு தயார்.

கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். காரம் குறைவாக சேர்த்தும் செய்யலாம்.

**கீர்த்தனா தத்துவம்:**

நண்பர்கள்,உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள் என யாராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர்களின் முகத்தில் புன்னகையை உருவாக்க முயலுங்கள். அவர்களின் மகிழ்ச்சி உங்கள் வேலைப் பளுவைக் குறைத்து, சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share