^கிச்சன் கீர்த்தனா: சீஸ் சாண்ட்விச்

Published On:

| By Balaji

பிரேக்ஃபாஸ்ட் எனப்படும் காலை உணவு உடல் ஆரோக்கியத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. ஊரடங்கு நேரத்தில் பணிக்குச் செல்லாமல் வீட்டிலேயே பலர் இருக்கும் சூழ்நிலையில் மொத்தமாக மதிய உணவை முடித்துக்கொள்ளலாம் என்பது தவறு. காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பது அவசியம். அதற்கு இந்த சீஸ் சாண்ட்விச் உதவும். நாள் முழுக்க புத்துணர்ச்சியைத் தரும்.

**என்ன தேவை?**

ரொட்டித் துண்டுகள் (பிரெட் ஸ்லைஸ்) – 6

சீஸ் துண்டுகள் – 3

வெங்காயம் – ஒன்று

தக்காளி – ஒன்று

உருளைக்கிழங்கு – 2

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

தக்காளி சாஸ் – 4 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

உருளைக்கிழங்கைக் கழுவி வேகவைக்கவும். தோலை நீக்கி நன்கு பிசைந்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிசைந்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை எடுத்துக்கொள்ளவும். மிளகுத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். ரொட்டித் துண்டுகளை எடுத்து அதன் மேல் தாராளமாக தக்காளி சாஸ் தடவவும். ஒவ்வொரு ரொட்டித் துண்டிலும் சுமார் 2 டீஸ்பூன் அளவு உருளைக்கிழங்கு கலவையை நிரப்பவும். இப்போது சீஸ் துண்டுகளை மேலே வைத்து மற்றொரு ரொட்டி துண்டால் மூடவும். இதேபோல் அனைத்து சாண்ட்விச்சுகளையும் தயார் செய்யுங்கள்.

ஒரு தவாவைச் சூடாக்கி வெண்ணெய் தடவவும். தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சை வைக்கவும். அது பொன்னிறமாக மாறும் வரை, சீஸ் உருகத்தொடங்கும் வரை இருபுறமும் வறுக்கவும். சுவையான வெஜ் சீஸ் சாண்ட்விச் தயார். இப்போது சாண்ட்விச்சைக் குறுக்காக வெட்டி சூடாகப் பரிமாறவும்.

[நேற்றைய கிச்சன் கீர்த்தனாவில் கடைக்குச் செல்லும்போதும் கவனம் தேவை!](https://minnambalam.com/public/2020/04/05/3/kitchen-keerthana-sunday-special)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share