சத்துமிகுந்த பணியாரம்!
குழிப்பணியாரச் சட்டி என்பது, முதலில் கல்லைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகத்தான் இருந்திருக்க வேண்டும். கல்சட்டியை அடுப்பில் இட்டு, மாவு ஊற்றிப் பணியாரம் சுடும் வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. பிறகு, மண் பணியாரச் சட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். அதன் பிறகுதான், இரும்பாலும் பிற உலோகங்களாலும் ஆன குழிப்பணியாரச் சட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஏழு குழிகள்கொண்ட குழிப்பணியாரச் சட்டி என்பது பொதுவான ஒன்றாகக் காலம் காலமாக இருந்துவருகிறது. அவற்றில் சுடப்படும் இந்தச் சிறுதானியக் குழிப்பணியாரம் பலரால் விரும்பப்படுவது.
**என்ன தேவை?**
சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு – தலா அரை கப்
உளுத்தம் பருப்பு – ஒரு கப்
ஜவ்வரிசி – சிறிதளவு
வெந்தயம் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 4 (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – கால் கப்
கேரட் துருவல் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
சிறுதானியங்கள், உளுத்தம் பருப்பு, ஜவ்வரிசி, வெந்தயம் இவை அனைத்தையும் களைந்து ஊறவைத்து நன்கு நைசாக அரைத்துப் புளிக்க வைக்க வேண்டும். பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சிறிது எண்ணெயில் வதக்கி மாவுடன் சேர்க்கவும். உப்பு, கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்து மாவைக் கரைத்துக்கொள்ளவும். குழிப்பணியாரச் சட்டியில் எண்ணெய் ஊற்றி, மாவை ஊற்றவும். இரண்டு புறமும் நன்கு வெந்ததும் எடுக்கவும்.
**என்ன பயன்?**
புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புகள், நார்ச்சத்துகள் மற்றும் மாவுச்சத்து உள்ள இந்தப் பணியாரம், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
[நேற்றைய ரெசிப்பி: குழிப்பணியாரம்](https://minnambalam.com/k/2019/06/08/1)�,