இன்றைய ஆண்ட்ராய்டு உலகின் அவசர ஓட்டத்தில் பாரம்பரிய விஷயங்கள் பல மறக்கப்பட்டும் பின்னுக்குத் தள்ளப்பட்டும் விட்டன. ஆனால், அன்றும் இன்றும் என்றும் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடாமல் ‘இன்னும் 20 நாள்கள்… 10 நாள்கள்’ என்று கவுன்ட் டவுன் கொடுத்து ஆர்வத்துடன் வரவேற்று கோலாகலத்துடன் கொண்டாடப்படக்கூடிய பெருமை பெற்றது தீபாவளி பண்டிகை. இதன் சிறப்பு அம்சங்களில் முக்கியமானவை இனிப்பு – பலகாரங்கள்.
ஆனால், பலருக்கும் உள்ள முக்கிய பிரச்சினை இனிப்புகள் செய்வதற்கு பாகுப் பதம் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன இனிப்புக்கு எந்தெந்த பதம் இருக்க வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பம். அந்தக் குழப்பத்தை இந்தக் குறிப்புகள் நிச்சயம் நீக்கும்.
**வெல்லப்பாகு**
வெல்லத்தைப் பொடியாகச் சீவி மூழ்கும் அளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கரையவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அடுப்பிலேற்றவும்.
ஒரு சிறிய தட்டில் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும் பாகில் சிறு துளி விட்டால் மென்மையாக கைகளில் உருட்ட வந்தால் இது அதிரசத்துக்கு ஏற்றது.
மீண்டும் பாகை அடுப்பிலேற்றி கொதிக்கவிட்டு கொதிவந்ததும் சிறிதளவு எடுத்து நீரில் விட்டால் `டங்’கென்று சத்தம் வரும். இதுதான் மனோகரம் செய்வதற்கு ஏற்ற பதம்.
மீண்டும் பாகை அடுப்பிலேற்றி கொதிக்கவிட்டு கொதிவந்ததும் சிறிதளவு எடுத்து நீரில்விட்டால் கைகளில் நன்றாக உருட்ட வரும். கெட்டியாகவும் இருக்கும். இந்தப் பதம் பொட்டுக்கடலை, வேர்க் கடலை, எள் உருண்டைகளுக்கு ஏற்றது.
அரிசி, பருப்பு வேகவைத்து இந்த பாகைச் சேர்த்து நெய் சேர்த்து சர்க்கரைப் பொங்கல் செய்தால் காலையில் செய்தது மாலை வரை கெடாது. பயணம் செய்யும்போதுகூட இந்த முறையில் செய்து எடுத்துச் செல்லலாம்.
**சர்க்கரைப்பாகு**
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு மூழ்கும் வரை நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து சர்க்கரைக் கரைந்ததும் கைகளால் தொட்டுப்பார்த்தால் விரல்களில் பிசுக்கென்று ஒட்டிக்கொண்டால், குலாப் ஜாமூன் செய்வதற்கு ஏற்ற பதம்.
மீண்டும் கொதிக்கவிட்டு விரல்களால் தொட்டுப் பார்த்தால் பாதியளவு வந்ததும் கம்பி மாதிரி வந்தது கட் ஆகிவிட்டால் அரை கம்பிப்பதம். அது லட்டு, மைசூர் பாகு செய்வதற்கு ஏற்ற பதம்.
மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவிட்டு, பிறகு விரல்களில் தொட்டுப் பார்க்கும்போது உடையாமல் ஒரு கம்பிப்பதம் பாகு வந்தால் ஜாங்கிரி, பாதுஷா செய்வதற்கு ஏற்ற பதம்.
மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவைத்தால் இரட்டைக் கம்பி வந்தால் அதைக் கைகளில் தொட்டு உருட்ட வந்தால் சர்க்கரை அதிரசம் செய்ய ஏற்ற பதம்.
மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவிட்டால் நார் நாராக வந்தால் அது சோன்பப்டி செய்ய ஏற்ற பதம்.
மீண்டும் அடுப்பிலேற்றி கொதிக்கவிட்டால் நிறம் மாறி வந்தால் கேரமல் பதம் கேக், சாக்லேட் செய்ய ஏற்ற பதம்.�,