கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – காலை உணவு கட்டாயம்!

Published On:

| By Balaji

எப்போது எந்த உணவைச் சாப்பிட வேண்டும்; எப்படிச் சாப்பிட வேண்டும் என்ற கணக்கீடுகள் எல்லாம் உண்டு. ஆனால் இன்றைய தலைமுறை அந்த வாழ்க்கை முறையிலிருந்து மாறிவிட்டது. பலருக்கு எதை, எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்றே தெரியவில்லை.

காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தலாமா என்ற கேள்வி பலருக்கு உண்டு. கண்டிப்பாக அருந்தலாம். அப்படியானால் வெதுவெதுப்பான நீரை அருந்துவது நல்லதா, குளிர்ச்சியான நீரை அருந்தலாமா என்கிற கேள்வி எழும். குளிர்ச்சியான நீரைத் தவிர்க்க வேண்டும். சாதாரண நீர் அல்லது சற்று வெதுவெதுப்பான நீரை அருந்தலாம்.

வெறும் வயிற்றில், வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிக்கலாம். இது உடலில் உள்ள கழிவுகளையும் நச்சுகளையும் வெளியேற்றும். இப்படிக் குடித்தால் உடல் எடை குறையும் என்று ஒரு நம்பிக்கை உண்டு. அது தவறு. தினமும் வெந்நீரில் எலுமிச்சைச்சாறு, தேன் கலந்து குடிப்பது சோர்வு நீக்கி சுறுசுறுப்பைக் கொடுக்கும்; செரிமானத்தைத் தூண்டும்.

காலையில் பால் சேர்க்காமல் டீ, காபி குடிக்கலாம். கருப்பட்டி சேர்த்துக் குடிப்பது நல்லது. கருப்பட்டி சேர்ப்பதால் கண்கள் குளிர்ச்சி அடைவதுடன் சிறுநீரகக் கோளாறுகளும் நீங்கும்.

**பெரியவர்களுக்கு…**

காலை உணவை 9 மணிக்குள் முடித்துக்கொள்வது நல்லது. குறிப்பாக, காலை 7.30 மணிக்குள் உணவு உண்ணும் பழக்கமுள்ள பலர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

**பெண்களுக்கு…**

பெரும்பாலான பெண்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 11 மணிக்குமேல் காலை உணவைச் சாப்பிடுகிறார்கள். இப்படித் தாமதமாகச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. இந்நிலை தொடர்ந்தால் 40, 45 வயதில் நீரிழிவு வரவும் வாய்ப்புண்டு.

**குழந்தைகளுக்கு…**

பள்ளி செல்லும் குழந்தைகளும் இல்லத்தரசிகளும் பெரும்பாலும் காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இதனால் வயிற்றுப்பிரச்சினைகள், ரத்தச்சோகை மற்றும் சத்துக் குறைபாட்டு நோய்கள் வரலாம். எனவே, காலை உணவைத் தவிர்ப்பது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்துக்கும் அறிவு வளர்ச்சிக்கும் காலை உணவு மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்.

[நேற்றைய ரெசிப்பி: பச்சைப்பயறு கட்லெட்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/01/84)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share