கொரோனாவை முன்னிட்டு நாடே முடங்கியிருக்கும் நிலையில் இன்று ஒருநாள் விரதம் இருந்தால் என்ன?
உடல் நலம் பேணுவதற்குக் குறிப்பிட்ட சில நாட்களில் விரதம் இருப்பது அவசியமாக இருக்கிறது. அதை இன்றே கடைப்பிடித்தால் என்ன?
பொதுவாக விரதம் ஆரோக்கியமானதா என்று கேள்வி எழுவது இயல்பு. இந்துகள் மட்டுமல்லாமல் இஸ்லாமியச் சகோதரர்கள் ரமலான் மாதத்தில் உண்ணா நோன்பு கடைப்பிடிப்பார்கள். கிறிஸ்தவ மதங்களிலும்கூட விரதம் இருக்கும் நடைமுறைப் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி, பெரும்பாலான மதங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு நடைமுறை உணவு உண்ணாமல் இருக்கும் விரத முறையாகும். இது ஒருபுறம் இருக்க, இறைவனின் மீதான பக்திக்காக விரதம் என்ற பெயரில் நம் உடலை வருத்திக்கொள்வது இயற்கைக்கு முரணானது என்கிறார்கள் ஒரு பிரிவினர்.
உண்மையில் விரதமிருப்பதால் நீங்கள் தகுந்த உடல்நலத்துடன் இருப்பதுடன் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் நலமாக இருப்பதற்குக்காகக்கூட என்றால் ஆச்சரியமாக இருக்கும். உடல்நலத்தைப் பேணாமல் உங்கள் உடலே உங்களுக்கு ஒரு சுமையாக உணர்வீர்களேயானால்,பாதிப்பு உங்களுக்கு மட்டும் இல்லை, உங்கள் வீடு, அலுவலகத்தைச் சேர்ந்தவர்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறார்கள். நீங்கள் செல்லுமிடமில்லாம் அந்த பாதிப்பை விநியோகிப்பீர்கள். எனவே, உங்கள் உடலைச் சரியாகப் பராமரித்து வருவது அவசியமாக இருக்கிறது.
**யார் விரதமிருப்பது?**
கபம், பித்தம் அதிகம் உள்ளவர்கள், உடலில் அதிகம் மலம் உடையவர்கள், பருமனாக உள்ளவர்கள், நல்ல உடல் வலிமை உள்ளவர்கள் மற்றும் நீரிழிவாளர்கள் (குளிர்காலங்களில்) உண்ணா நோன்பை மேற்கொள்ள மிகவும் தகுதியானவர்கள் என்கிறது ஆயுர்வேதம். மற்றவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, விரதம் கடைப்பிடிப்பதே சிறந்தது.
**என்ன நன்மை?**
உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடலில் தேங்கும் கழிவுகளே. ஆகவே, விரதம் மேற்கொள்வதால் அது சிறுநீர், மலம் போன்ற உடல் கழிவுகளை நீக்கிவிடும். மேலும், உடலில் உள்ள ரத்தக் குழாய்களில் தங்கியுள்ள அழுக்குகள், கசடுகள் நீங்கிவிடும். தொண்டை, இதயம், ரத்தம் தூய்மையடையும். காரணம், உணவு உண்ணாதபோது உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைப்பதால் அந்த நேரங்களில் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்கின்றன.
மேலும், உடலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டைச் சீராக்குகிறது. ஹார்மோன் சுரப்புகளைத் தூண்டுகிறது. குறிப்பாக, பசியைத் தூண்டும் ஹார்மோனான க்ரைலின் (Ghrelin) சுரப்பைச் சீராக்கி பசியின்மையைப் போக்கும்.
உடலில் உள்ள பிராணவாயு உள்ளிட்ட 10 விதமான வாயுக்களின் செயல்பாட்டைச் சீராக்கும். இந்த வாயுக்கள் உடல் இயக்கத்துக்கு முக்கியமானவை. இவை வளர்சிதை மாற்றத்தை (மெட்டபாலிசம்) அதிகரிக்கும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைத்து நல்ல கொழுப்புகள் (HDL cholesterol) அதிகரிக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்களில் படியும் கொழுப்புகளைக் குறைத்து மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும்.
உடல் வலிமை உள்ளவர்கள், விளையாட்டு வீரர்களுக்கு (Athletes) வலுவான தசைகளுடன் அழகான உடல் கட்டமைப்பு கிடைக்கிறது. பருமனாக உள்ளவர்களுக்கு எடை குறைய உதவுகிறது. இதுதவிர மனத்தூய்மை, மன வலிமை பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாதாமாதம் உங்களுக்கு உகந்த ஏதோ ஒரு நாளில், நீங்கள் விரதம் இருக்கலாம். அன்று எதையும் சாப்பிட வேண்டாம். அப்படி முழு விரதம் இருக்க முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் பழ ஆகாரத்தில் இருக்கலாம். கவனிக்கவும் பழ ஆகாரம், பல ஆகாரம் அல்ல.
பழ ஆகாரம் உண்ணும்போது வயிற்றில் அதிக பளு இல்லாததால், வயிற்றிலுள்ள பழைய கழிவை வெளித்தள்ளுவதற்கு உடலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.
உணவுக்கு நீங்கள் அடிமையாக இருப்பதாக உணர்ந்தால் ஒருவேளை உணவைத் துறந்திடுங்கள். இது உங்கள் உடலைக் கொடுமைப்படுத்துவதற்கு அல்ல. உடலின் கொடுமையிலிருந்து விடுதலை பெற. குறைந்தது மாதம் ஒரு நாளாவது பழ ஆகாரத்தில் இருப்பது ஒவ்வொருவருக்கும் நல்லது.
இன்று கடைகள் இல்லை என்பதற்காக நேற்று வாங்கிவைத்த மொத்த பொருட்களையும் வயிற்றுக்குள் தள்ளாமல் இன்று ஒருநாள் மட்டும் விரதம் இருந்து பாருங்கள்; விரத அற்புதத்தை உணருவீர்கள்.
[நேற்றைய ரெசிப்பி: கிரீன் மசாலா ஃப்ரை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/03/21/4/kitchen-keerthana-fish-masala-fry)�,