‘கெட்டதில் ஒரு நல்லது’ என்பார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமல் நகரும் வாழ்க்கை நிலையில் நினைத்துப் பார்த்து நிம்மதியடையவும் திரும்பிப் பார்த்துத் திருத்திக்கொள்ளவும் நிறைய விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது கொரோனா. முக்கியமாக உணவும் சமையலறையும்.
வீட்டில் எல்லாம் இருந்தும் வெளியில் சாப்பிடும் வழக்கம் பலருக்கும் உண்டு. ஹோட்டல் இல்லாத நாளை அவர்கள் யாரும் கற்பனைகூடச் செய்து பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கெல்லாம் லாக்டவுண் நாட்கள் நல்ல பாடம் புகட்டி வருகிறது. வீட்டிலேயே ஆரோக்கியமாகவும் விதவிதமாகவும் சமைத்துச் சாப்பிட முடியும் என்ற உண்மையை உணர்ந்து வருகிறார்கள் பலர்.
ஒருவேளை ஹோட்டலுக்கு ஆகும் செலவில் மூன்றுவேளைகள், வீட்டிலுள்ள அனைவரும் ஆரோக்கியமாக, திருப்தியாகச் சாப்பிட முடியும் என்பதையும் புரிந்துக்கொள்கிறார்கள்.
முடியாத நாள்களில் வெளியில் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தினமும் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது முடியாத விஷயமில்லை. அடிக்கடி வெளியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உணர்ந்த பல உபாதைகள், இந்த லாக்டவுண் நாட்களில் காணாமல் போயிருப்பதை உணர்ந்தோமென்றால், நாம் ஆரோக்கியத்தின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
அதே நேரம், லாக்டவுண் நாள்களில் பொழுதுபோகாமல் கிச்சன் பக்கம் எட்டிப்பார்த்த ஒவ்வோர் ஆணுக்கும் அம்மா, மனைவி, மகள் மீது மரியாதை இப்போது கூடியிருக்கிறது. கழுவாமல் போடப்படும் எச்சில் தட்டுகள், பாத்திரங்களால் நிரம்பி வழியும் சிங்க், பாலும் குழம்பும் பொங்கி வழிந்து கிடக்கும் அடுப்பு, சுத்தம் செய்யப்படாத சமையலறை மேடை… இவற்றைச் சுத்தப்படுத்துவதென்பது சமையலைவிடவும் பெரிய வேலை என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த நாட்கள்.
நிறைய வீடுகளில் மனைவி வொர்க் ஃப்ரம் ஹோமில் பிசியாக இருக்க, சமையல் பொறுப்பை சில கணவர்கள் கைப்பற்றிய நிகழ்ச்சிகளைக் கேள்விப்படும்போது ஆறுதலாக இருக்கிறது.
‘சாம்பார்ல உப்பு அதிகம்… ரசமா இது… கூட்டுக்கும் பொரியலுக்கும் வித்தியாசம் தெரியாதா…’ என்றெல்லாம் போகிற போக்கில் மனைவியின், அம்மாவின் சமையலை விமர்சனம் செய்த சில ஆண்களுக்கு, தான் சொன்னது தவறு என்பது புரிய தொடங்கியிருக்கிறது. பார்த்துப் பார்த்துச் செய்கிற விருந்து பல நேரங்களில் சுமார் எனப் பெயர் வாங்கும்; அவசரமாக வைக்கிற ரசம் ஆஹா என அப்ளாஸ் வாங்கும். சமையல் என்பது அப்படித்தான். ஆண்கள் சமைத்தாலும் அப்படித்தான்!
பொழுதுபோக்காகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்த வீட்டு வேலைகளையும், வெளியுலக உணவுகளையும் லாக்டவுண் நாட்களோடு நிறுத்திவிடாமல், எப்போதும் தொடர்ந்தால், மனைவியின் வேலைப்பளு பாதியாகக் குறையும். அதற்கு ஈடாக வீட்டிலுள்ளவர்களின் அன்பும் காதலும் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
[நேற்றைய ரெசிப்பி: பப்பாளிக்காய் வெஜ் குருமா](https://minnambalam.com/k/2020/04/11/3)�,