[கிச்சன் கீர்த்தனா: கொரோனா ஸ்பெஷல்

Published On:

| By Balaji

கொரோனா வைரஸ் பரவல் நாடெங்கிலும் வியாபித்திருக்க… ஊரடங்கு சட்டத்தால் வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் மேலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

உதாரணத்துக்கு பால் பாக்கெட், பேப்பர், வாட்டர் கேன், காய்கறிகள் உள்ளிட்ட தினசரி தேவைகளைப் பராமரிப்பவர்கள் இல்லத்தரசிகளே. இவை தவிர, லாண்டரி, கொரியர் கொண்டு வருபவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வயதானவர்களைத் தேவைப்படும்போதும் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இப்போதும் இருக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

தினம் தினம் இப்படிப்பட்ட வெளியாட்கள் மூலமாகவோ அல்லது அவர்கள் கொண்டு வந்து தருகிற பொருள்கள் மூலமாகவோ நம் வீட்டுக்குள் கொரோனா நுழையாமல் இருக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

**பால் பாக்கெட் – குழாய் நீரில் அலசி, கூடுதல் நேரம் காய்ச்சவும்.**

இரும்பு கேட் அல்லது கதவில் ஒரு துணிப்பையை மாட்டி பால் பாக்கெட்டுகளை வாங்கும் பழக்கமில்லாதவர்கள் இப்போது கதவில் பையை மாட்டி அதில் பால் பாக்கெட்டுகளை போடச் சொல்லுங்கள். பிறகு ரன்னிங் வாட்டரில் பால் பாக்கெட்டை அலசிவிட்டு, மற்ற நாள்களைவிட சில நிமிடங்கள் கூடுதலாக கொதிக்க வைத்து அருந்துங்கள்.

**கேன் வாட்டர் – காய்ச்சிக் குடிக்கவும்.**

வாட்டர் கேனை வாசலிலேயே வைக்கச் சொல்லுங்கள். கேன் போடுபவர்களை, கேனை கைகளால் தூக்காமல் அதற்கென இருக்கிற உபகரணத்தைப் பயன்படுத்தித் தூக்கச் சொல்லலாம். வாட்டர் கேனில் அடைப்பட்டிருக்கும் நீரோ அல்லது மெட்ரோ வாட்டரோ எதுவானாலும் கொதிக்க வைத்து ஆற வைத்துக் குடியுங்கள்.

**நியூஸ் பேப்பர், கொரியர்கள் – வெயிலில் வைக்கவும்.**

வெளியில் இருந்து வருகிற பேப்பர், கொரியர் மற்றும் புத்தகங்களை சில நிமிடங்கள் வெயிலில் வைத்து, பிறகு படிக்கலாம். கொரியரில் வருகிற பார்சல்களையும் சிறிது நேரம் வெயிலில் வைத்துவிட்டு பிரிப்பது நல்லது.

**காய்கறிகள் – உப்பு நீரில் அலசி, நன்கு வேக வைக்கவும்.**

மார்க்கெட்டில் வாங்கியது என்றாலும் சரி, வீட்டு வாசலுக்கு வந்து தருகிற வாடிக்கை விற்பனையாளர் என்றாலும் சரி, காய்கறிகளை 15 நிமிடங்கள் கல் உப்பு கலந்தத் தண்ணீரில் போட்டு ஊறவிட்டு, பிறகு ரன்னிங் வாட்டரில் கழுவி பிரிட்ஜில் வையுங்கள். தவிர, நன்கு வேக வைத்துச் சாப்பிடுங்கள். கீரை என்றால் அரைமணி நேரம் கல் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து சமையுங்கள்.

**லாண்டரி துணிகள் – வீட்டிலேயே சலவை, இஸ்திரி செய்யலாம்.**

சலவைத் துணிகள் வீட்டுக்கு வந்தாலும் சரி, வெளியே இஸ்திரி செய்யப்பட்டத் துணிகள் என்றாலும் சரி, அரை மணி நேரம் சூரிய ஒளியில் வைத்து, பிறகு அணியலாம். இந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த லாண்டரி துணிகளை மற்ற துணிகள் இருக்கிற பீரோவில் சேர்த்து வைக்காமல், தனியாக வைத்து பயன்படுத்துங்கள். இப்போதைக்கு வீட்டிலேயே சலவை மற்றும் இஸ்திரி வேலைகளைச் செய்துகொள்வதே பாதுகாப்பானது.

**காஸ் சிலிண்டர் – திருகை வெறும் கைகளால் தொடாதீர்கள்.**

காஸ் சிலிண்டர் போடுபவர்கள் வீட்டுக்குள் வரும்போது முகத்துக்கு மாஸ்க் போடச் சொல்லுங்கள். நீங்களும் போட்டுக்கொள்ளுங்கள். சிலிண்டரின் சீலைக் கழட்டி அவர்களே கேஸ் வெளியே வருவதற்கான இணைப்பை மாட்டிவிட்டுச் செல்கிறார்கள் என்றால், ஆன், ஆஃப் செய்கிற திருகை ஒரு நாள் முழுக்க வெறும் கைகளால் தொடாமல், கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக் கவர் அணிந்து தொடுங்கள்.

உங்கள் வீட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு விடுமுறை அளித்துவிடுவது நல்லது.

**ஆன்லைன் ஷாப்பிங்கை அறவே தவிர்ப்பது அதைவிட நல்லது.**

இவை அனைத்தும் வீட்டில் அடைபட்டிருக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.

[நேற்றைய ரெசிப்பி: கொள்ளு சுரைக்காய் கஞ்சி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/28/3)

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share