உடனடி எனர்ஜிக்கு உத்தரவாதம்!
பெயரைச் சொன்னாலே பலர் தெறித்து ஓடும் சிற்றுண்டி உப்புமா! விருந்தினர்களின் திடீர் வருகையின்போது கைகொடுத்து உதவுவது, வேலைக்குப் போகும் பெண்களுக்குப் பல நாட்களுக்கு உற்ற துணையாக இருப்பது, 10 நிமிடங்களுக்குள் செய்துவிடலாம் என்கிற பெருமைக்குரிய சிற்றுண்டி எனப் பல சிறப்புகளைக் கொண்டது உப்புமா. அப்படியிருக்க, அதன் மேல் ஏன் வெறுப்பு? அரிசி, கோதுமை, சேமியா என விதவிதமான வகைகள் இருந்தாலும் உப்புமாக்களின் ராணி, ரவா உப்புமாதான்!
**என்ன தேவை?**
ரவை – 100 கிராம் (ஒரு கப்)
சின்ன வெங்காயம் – 6 (தோல் நீக்கித் துண்டுகளாக வெட்டவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (துண்டுகளாக வெட்டவும்)
இஞ்சி – பாதி சுண்டு விரல் அளவு (தோல் நீக்கித் துண்டுகளாக வெட்டவும்)
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 2 கப்
தாளிக்க:
எண்ணெய் – 3 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
உளுத்தம் பருப்பு – ஒன்றரை டீஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
ரவையை வெறும் வாணலியில் லேசாகச் சூடாகும் வரை வறுத்து ஆறவிடவும். வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில்வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். கலவை வதங்கியதும் இரண்டு கப் தண்ணீரை ஊற்றவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வறுத்து ஆறவைத்துள்ள ரவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவையானது கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.
குறிப்பு: விருப்பமுள்ளவர்கள் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்தும் உப்புமா தயார் செய்யலாம்.
வெங்காயம், பச்சை மிளகாய் இல்லாமல் கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்தும் உப்புமா தயார் செய்யலாம்.
**என்ன பலன்?**
அவசரத்துக்குக் கைகொடுக்கும் சிற்றுண்டியானாலும் கொஞ்சம் சத்தான உணவும்கூட. 100 கிராம் உப்புமாவில் 222 கலோரிகள், கொழுப்பு 3.3 கிராம், கார்போஹைட்ரேட் 40.2 கிராம், புரோட்டீன் 7.25 கிராம், சர்க்கரை 1.6 கிராம் ஆகியவை நிறைந்துள்ளன. அதோடு, இரும்புச்சத்து, கால்சியம் ஆகியவையும் உள்ளன. இது உடல் எலும்புகளுக்கும் நரம்பு மண்டலத்துக்கும் நன்மை செய்யக் கூடியது. காலை நேரத்துக்கான சிற்றுண்டி மட்டுமல்ல; உடனடி எனர்ஜி தரும் சிற்றுண்டியும் இதுவே!
�,