காஷ்மீர் தாக்குதல்: தமிழக வீரர்கள் உடல் அடக்கம்!

Published On:

| By Balaji

காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டன.

கடந்த 14ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 வீரர்கள் பலியானதாகத் தகவல் வெளியானது. இவர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தாக்குதலில் பலியான அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சிவசந்திரன், தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோரது உடல்கள், இன்று (பிப்ரவரி 16) காலையில் திருச்சி விமானநிலையத்துக்கு எடுத்து வரப்பட்டது.

அங்கு மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

இன்று பிற்பகலில் சிவசந்திரன் உடல் கார்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. வழியெங்கும் ஏராளமான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனந்தகுமார் ஹெக்டே, தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் சிவசந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, மாலை 5 மணியளவில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் சிவசந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய் உதவித்தொகைக்கான காசோலை சிவசந்திரன் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.

அதேபோல, வீரர் சுப்பிரமணியனின் உடல் திருச்சியில் இருந்து மதுரைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து சவலாப்பேரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சுப்பிரமணியனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். மாலை 6.15 மணியளவில் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிவசந்திரன், சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இன்று, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

**பெட்ரோல் பங்கில் அஞ்சலி**

உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்காக, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடங்கள் டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். “தாக்குதலில் பலியான இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் வீர மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4,800 பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனையை நிறுத்தி, வீரர்களின் தியாகத்தைப் போற்றவுள்ளோம்” என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

**எல்ஐசி அறிவிப்பு**

இதே போன்று கர்நாடாகா மாநிலத்தில் காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர் குருவின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.3 லட்சம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது மாண்டியா எல்ஐசி நிறுவனம். எந்த சான்றிதழும் தர வேண்டாம் என்று கூறி, அவரது குடும்பத்தினரிடம் பணத்தை உடனடியாகக் கொடுத்துள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share