காஷ்மீர் தாக்குதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்த பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
நேற்று (பிப்ரவரி 14) ஜம்மு காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா ஸ்ரீநகர் – ஜம்மு சாலையில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ ரக கார் ஒன்று வேகமாக வந்து வீரர்கள் சென்ற பேருந்தின் மீது மோதியது. வெடிகுண்டுகள் வெடித்ததில் அந்த பேருந்தில் இருந்த 44 வீரர்கள் பலியானர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்குப் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி கல்யாண்மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், தேசிய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உறுதிமொழி எடுக்கப்பட்டது. பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
**தூத்துக்குடி வீரர் பலி**
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த 44 பேரில் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிஆர்பிஎஃப் வெளியிட்டுள்ளது. இறந்த வீரர்களில் ஒருவரது பெயர் சுப்பிரமணி என்று தெரிய வந்துள்ளது. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரது மகன் ஆவார். ஆனால், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் வரவில்லை என தூத்துக்குடி ஆட்சியர் தெரிவித்தார். அரசுத் தரப்பில் தெரிவித்த பின்னர், அரசு மரியாதை செலுத்தச் செல்வேன் என்றார். மற்றொரு தமிழக வீரர் குறித்த அடையாளமும் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
**இன்னொரு மகனையும் இழக்கத் தயார்**
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரத்தன் தாக்கூர், இந்த பயங்கரவாதத் தாக்குதலில் பலியானார். இது குறித்து அவரது தந்தை கூறும்போது, “தாய் நாட்டுக்கான சேவையில் ஒரு மகனை இழந்துவிட்டேன். என்னுடைய மற்றொரு மகனையும் நான் போருக்கு அனுப்புவேன். அவரையும் தாய்நாட்டுக்காக இழக்கத் தயார். ஆனால், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.
**மாணவர்கள் அஞ்சலி**
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில், பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதுபோன்று, தாக்குதலில் பலியான வீரர் சுப்பிரமணியனின் சொந்த ஊரான சவலாப்பேரியில் உள்ள பள்ளி மாணவர்கள், உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.
**கண்டனம்**
பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியவர், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
அனைத்துத் தீவிரவாதக் குழுக்கள், அமைப்புகளுக்கு ஆதரவு அளிப்பதை உடனடியாக நிறுத்துங்கள் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செயலாளர் சாரா சாண்டர்ஸ் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், இந்திய மக்களுக்கும், இந்திய அரசுக்கும் எங்களது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
**இணையதள சேவை முடக்கம்**
பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீரில் இணையதளச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இணையதள வேகம் 2ஜி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும், பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்புவதைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று ஜம்முவில் செல்போன் இணையதளச் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் இன்று நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
�,”