காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா ஸ்ரீநகர் – ஜம்மு சாலையில் நேற்று (பிப்ரவரி 14) ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் சென்றபோது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஸ்கார்பியோ ரக கார் ஒன்று வேகமாக வந்து மோதியதில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது என்ற நபர் இந்த பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
**யார் இந்த அதில் அகமது?**
அதில் அகமது சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருந்திருக்கிறார். இவருக்கு வயது 22. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் குந்திபார்க் கிராமத்தைச் சேர்ந்தவர். 2017ஆம் ஆண்டு ஜூலையில் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் கடந்த ஆண்டு தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் என்று காஷ்மீர் காவல் துறையின் அறிக்கைகள் கூறுகிறது. இது மசூர் அசார் தலைமையில் இயங்கக்கூடிய அமைப்பு.
அதில் அகமது தக்ரனேவாலா மற்றும் குந்திபார்க்கின் வாகாஸ் கமாண்டோ எனவும் இந்த நபர் அப்பகுதியில் அறியப்படுகிறார். இந்த கொடூரத் தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு அவருடைய புகைப்படங்களும், இச்சம்பவத்துக்கு முன்பு அவர் பேசிய காணொளி ஒன்றும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
”என் பெயர் அதில் அகமது. நான் ஒரு வருடத்திற்கு முன்பு ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைந்தேன். ஒரு வருடம் காத்திருந்த பிறகு நான் எதற்காக ஜெய்ஷில் இணைந்தேனோ அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தக் காணொளி உங்களை வந்தடையும்போது நான் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய கடைசி செய்தி” என்று அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.
மேலும், ”காஷ்மீரிகள் கடைசி யுத்தத்துக்கு தயாராகி, ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் இணைய வெண்டும். என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவினர்களும் இஸ்லாத்திற்காக வீரமரணம் அடையவதை திருமண விழாக்களை கொண்டாடுவதைப் போல மகிழ்ச்சியோடு ஏற்க வேண்டும். இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிய வேண்டும், இளம் ஆண்கள் காதலில் விழக்கூடாது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தியாகிகள் மூலம் விடுதலை செய்யப்பட வேண்டும்” என்றும் அதில் அந்தக் காணொளியில் அவர் கூறியுள்ளார்.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் காஷ்மீரிகள் பங்கேற்பது இது 3ஆவது முறையாகும். ஃபர்தீன் அகமது கான் என்ற 16 வயது சிறுவனும், அஃபாக் அகமது ஷா என்ற 17 வயது சிறுவனும் இதற்கு முன்னதாக இந்தச் செயலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.�,”