அதிமுகவின் பொதுக்குழு பற்றிய விவாதங்களிலேயே மூழ்கியிருக்கும் ஊடகங்கள், தமிழர்களுக்கான பிரச்னைகளை பேசும் ஒரு பொதுக்குழுக் கூட்டத்தைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் எட்டாவது பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டம், ஓசூரில் கடந்த 10,11 தேதிகளில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் தொடர்பான முக்கிய பிரச்னைகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அதில் முக்கியமாக மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு என்ற பொருளில் மத்திய அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என்றும், காவிரி வழக்கில் தமிழக அரசு தமிழக உழவர்களுக்காக வாதிடாததால் காவிரி உரிமை மீட்புக் குழுவையும் வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவளி ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டி துறை, அஞ்சல் துறை, தொலைப்பேசி துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது விழுக்காடு அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
அண்மைக்கால எடுத்துக்காட்டு நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல் மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
எட்டுக்கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ள மண்ணின் மகன்கள், மண்ணின் மகள்கள் எண்ணிக்கை ஒரு கோடி. மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரஸ் ஆட்சி சரோஜினி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையிரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், பாஜக ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசு கர்நாடகத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு – மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வலியுறுத்தியும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் மண்ணின் மக்கள் அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் நடத்த உள்ளோம்” என்கிறது முதல் தீர்மானம்.
இரண்டாவது தீர்மானமாக, “உச்ச நீதிமன்றம், தமிழக உழவர்களைக் காவிரி வழக்கில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காவிரி வழக்கை தமிழ்நாடு அரசு, முழுமையான அக்கறையோடு நடத்தவில்லை. தமிழர்களின் சார்பாக வாதிட வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்திய அரசின் அரசியல் அழுத்தங்களால் உரிமைகளை விட்டுக்கொடுக்கவும் முயல்கிறது. காவிரி வழக்கின் போக்கைத் திசைமாறச் செய்யும் வகையில் கர்நாடகம் கிளப்பும் பொய்களுக்கும், இந்திய அரசின் வஞ்சகத்துக்கும் தமிழ்நாடு அரசு வளைந்து கொடுக்கிறது.
எனவே, காவிரி வழக்கில் தமிழர்களுக்காக வாதிட ‘காவிரி உரிமை மீட்புக் குழு’வுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென கடந்த ஆகஸ்ட் 21 அன்று உச்ச நீதிமன்றப் பதிவாளருக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் கடிதம் எழுதினார். தமிழர்கள் பலரும் அவ்வாறே உச்ச நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல்கள் அனுப்பினர். அதற்கு, உச்ச நீதிமன்றம் இதுவரை எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு உழவர்கள் சார்பில் வாதிட ‘காவிரி உரிமை மீட்புக் குழு’வைக் காவிரி வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென இச்சிறப்புப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது” என்று தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது.
�,”