காவிரியில் கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது உண்மை!

உச்ச நீதிமன்றத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாசு கலந்த நீரைத்தான் கர்நாடகா தமிழகத்துக்கு வழங்குவதாக மனுத்தாக்கல் செய்துள்ளது.

காவிரி விவகாரத்தில், தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பல மோதல்கள் நிலவிவருகின்றன. கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு பல கிலோ மீட்டர் தூரம் தாண்டி தமிழகத்திற்குப் பாய்ந்துவருகிறது. இந்நிலையில் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் வழியில் இந்த ஆற்றில், பல்வேறு வகையான ஆலைகளிலிருந்து கழிவுகள் கலக்கப்படுகின்றன.

மேலும் காவிரி ஆற்றில் கலந்துவரும் மொத்த கழிவுகளில் சுமார் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் காவிரி நீர் பல அபாயகரமான கழிவுகளோடுதான் தமிழகத்தை வந்துசேருகிறது. அந்தக் கழிவு நீரைத்தான் தமிழகத்தில் விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு, கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரில் கழிவுகள் கலந்தே தமிழகத்துக்கு வருவதாகவும் அதைத் தடுக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனு தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வுசெய்து மனுத்தாக்கல் செய்யுமாறு கடந்த ஆண்டில் தெரிவித்திருந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பரத்வாஜ் தலைமையில் இந்தக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இந்தக் கூட்டுக்குழு ஆய்வைத் தொடங்கியது.

கழிவுநீர் கலப்பது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நேற்று (மார்ச் 9) உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு அறிக்கையில், கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்குத் திறந்துவிடும் காவிரி நீரில் அதிக அளவு கழிவுகள் கலந்துவருவதாகவும், இந்தக் கழிவு கலந்த நீரை உபயோகப்படுத்துவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை விரிவாக நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளது.�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts