காவல் துறையினருக்கு வார விடுப்பு: அரசின் நிலைப்பாடு?

Published On:

| By Balaji

காவல் துறையினருக்கு வார விடுப்பு வழங்குவது குறித்து, அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை ஜூலை 19ஆம் தேதி தெரிவிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் துறையினரின் நலன் பணி குறைப்பு ஆர்டர்லி தொடர்பான வழக்குகள் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. கடந்த முறை நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்த போது, காவல் துறையினருக்கு வாரம் ஒருநாள் ஏன் விடுப்பு வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பி, அதற்குத் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டரில் உள்ள விதிமுறைகள் தொடர்பாக தாக்கல் செய்தார். அதில் காவல் துறையினர் ஒவ்வொருவருக்கும் வார விடுப்பு வழங்க வகை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வார விடுப்பு நாளில் பணிக்கு வரும் காவலர்களுக்கு 200 ரூபாய் கூடுதல் பணி நேரம் ஊதியம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் 200 ரூபாய் தருகிறார்கள் என்றால் யாரும் விடுப்பு எடுக்க மாட்டார்கள் என்றும், பணிக்கு வரத் தான் செய்வார்கள் என்றும் நீதிபதி தெரிவித்தார். அரசு ஊழியர்கள் மாதத்தில் இரண்டு நாள் விடுப்பு எடுக்கும் நிலையில் காவலர்களுக்கு ஏன் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கக்கூடாது என்று விரிவான விளக்கத்தைத் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பேசிய நீதிபதி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்கு மதுபானம் அருந்துவோர்தான் காரணம். காவல் துறை மீதும் அரசு மீதும்தான் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

காவல் பணியில் ஈடுபடும் காவலர்களை வாரத்தில் ஒரு நாளாவது தங்கள் குடும்பத்துடன் செலவிட அரசு அனுமதிக்க வேண்டும். காவல் துறையின் பணி என்பது மிகவும் அவசியமானது. காவல் துறையினர் இல்லையென்றால் தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலை உருவாகிவிடும். காவல் துறையினர் குற்றவாளிகளுடன் கைகோர்க்க கூடாது. சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, உடனடியாக காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கடந்தாண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற காவல் துறையினரின் குழந்தைகள் பெரும்பாலானோர் போக்குவரத்து காவலர்களின் வாரிசுகளாக இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் சட்டம் ஒழுங்கு காவல் துறை மற்றும் குற்றப்பிரிவு காவல் துறையினர் வீட்டில் செலவளிக்கும் நேரம் குறைவாக இருக்கிறது. போக்குவரத்து காவல் துறையினர் குடும்பத்திடம் நேரம் செலவளிப்பதால், பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், காவல் துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு என்பது ஆவணங்களில் மட்டுமே இருக்கிறது. அதை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை விளக்கமாகத் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி 19ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share