காவல் துறைக்கு புதிய வாகனங்கள்: முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?

Published On:

| By Balaji

காவல் துறையினரின் பயன்பாட்டுக்காக மொத்தம் 95 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2,271 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி மார்ச் 6ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. வாகனங்கள் வழங்கப்படுவதற்கு அடையாளமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மோட்டார் சைக்கிள்கள், ஜீப்புகள், வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட 41 வாகனங்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த வாகனங்கள் தொடர்பாக காவல் துறை வட்டாரங்களில் முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக விசாரித்தோம்…

“காவல் துறை ரோந்து (ஹைவே பேட்ரோல்) பயன்பாட்டுக்காக டோயோட்டோ கிரிஸ்டா கார் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் இதுபோன்று ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. விபத்து நடந்தால் அந்தப் பகுதியில் நிலைமையைச் சீராக்க வேண்டும், குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதுதான் ரோந்து வாகனங்களின் முக்கிய பணியாக இருக்கிறது.

ரோந்து வாகனங்களுக்கு மாதம் தலா 150 லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்படுகிறது. இதைக்கொண்டு கணக்கிட்டால் ரோந்து வாகனங்களால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 கி.மீ வரையே பயணிக்க முடியும். இவ்வளவு கஷ்டங்கள் இருக்கக் கூடிய நிலையில், மாவட்ட எஸ்பிக்கள் புதிய வாகனங்களைச் சில நாட்களிலேயே பெற்றுக்கொண்டு, பழைய வாகனங்களை அளித்துள்ளனர்.

புதிய வாகனங்கள் கொடுக்கப்பட்ட உடனே, அமைச்சர்கள் தங்களது மாவட்ட எஸ்பிக்களைத் தொடர்புகொண்டு, தனது எஸ்கார்டு பணிக்குப் புதிய காரை கொடுங்கள் என்று கூறி ரோந்துப் பணிக்காக வழங்கப்பட்ட புதிய கார்களைப் பிடுங்கிக்கொண்டனர். இதனால் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவோர் பழைய கார்களையே மீண்டும் பயன்படுத்தும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்று குற்றம்சாட்டுகிறார்கள் காவல் துறை தரப்பில்.

மேலும், “எஸ்பி, டிஐஜி, ஐஜிக்களுக்கு மாருதி எர்ட்டிகா கார் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது தங்களது பணிக்குத் தோதாக இல்லை என்று கூறுகிறார்கள். உளவுத் துறைக்கென தனியாக வாகனங்கள் கொள்முதல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்துக்கு விஐபி வந்தால் அவர்களது வாகனத்தைப் பின் தொடர்ந்து செல்வதுதான் உளவுத் துறையின் பணி. கூட்டம், கலவரம் என்றால் அந்தப் பகுதிக்கு உடனடியாக விரைய வேண்டும். ஆனால், உளவுத் துறையினருக்கோ மாருதி ஆல்டோ காரை வழங்கவுள்ளனர்.

அரசியல் பிரமுகர்களோ அல்லது விஐபிக்களோ வரும்போது அவர்களது வாகனங்களுக்கு மாருதி ஆல்டோ கார் எவ்வாறு ஈடுகொடுக்கும். சுமோ வாகனத்தையே மிஞ்சிவிட்டுச் சென்றுவிடுகிறது விஐபிக்களின் கார். இப்போதும் வழங்கப்படும் ஆல்டோ காரில் உயிரைப் பணயம் வைத்துதான் செல்ல வேண்டும்” என்றும் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்கிறார்கள்.

**-வணங்காமுடி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share