|காவலர் உடல் தகுதித் தேர்வு: ஒருவர் உயிரிழப்பு!

public

ஜார்கண்டில் காவலர் உடல் தகுதித் தேர்வில் 10 கி.மீ ஓடி மயங்கி விழுந்த ஆறு பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜார்கண்டில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி ஜூலை 2ஆம் தேதி தொடங்கியது. இந்தப் பணி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜார்கண்டின் ஜாம்ஷெட்பூரில் சித்கோரா பகுதியில் ஜே.ஏ.பி. மைதானத்தில் நேற்று (ஜூலை 11) உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில், ஒரு மணிநேரத்திற்குள் 10 கிலோ மீட்டர் தொலைவு ஓடும்படி தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ஓடி கொண்டிருந்தவர்களில் பொகாரோ பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் ஷா (26) உள்பட 5 பேர் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளனர். ஆறு பேரும் உடனடியாக எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேஷ் குமார் ஷா உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் கண்காணிப்பாளர் பிரதாப் குமார் கூறுகையில், காவலர் பணிக்கு 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 200 பேர் ஒவ்வொரு நாளும் உடற்தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்படுவார்கள். நேற்று காலை 5.15 மணியளவில், உடல் தகுதி மற்றும் பிற சோதனைகள் தொடங்கியது. அதில், 6 மணியளவில் ஒரு மணி நேரத்திற்குள் 10 கி.மீ ஓட வேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதில் ஷா 23 அல்லது 24ஆவது சுற்றில் மயங்கி கீழே விழுந்திருக்கக் கூடும். உடனடியாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. நீர்ச் சத்து குறைபாட்டினால்தான் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கக்கூடும். இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்துக்கான முக்கிய காரணம் தெரியவரும். இது குறித்து ஷாவின் பெற்றோருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

டெல்லியில் பணிபுரிந்து வந்த ஷா, பணியை முடித்த பிறகு நேரடியாகத் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார் என போலீசார் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *