ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பிரமாண்ட முறையில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் காலா. இந்தப் படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மே 9ஆம் தேதி இசை வெளியீடு என அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சி எங்கே நடைபெறவிருக்கிறது என்கிற தகவலையும் வெளியிட்டுள்ளது.
உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி வெளியான ‘செம்ம வெயிட்’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் காலா பட இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 9ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ரஞ்சித்தின் அனைத்துப் படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்துள்ளார். அனைத்துப் படங்களுக்கும் இசையில் தனது பங்களிப்பைத் திறம்பட செய்திருக்கிறார். எனவே சந்தோஷ் நாராயணன் தனது (Dopeadelicz & RAP) இசை குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவை நேரடி இசை நிகழ்ச்சியாக நடத்தவிருக்கும் நிகழ்வை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவொ நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர். இந்த இசை வெளியீட்டு விழாவை நேரலையாக ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர்.
�,