காற்றைக் குடிநீராக்கும் நீரோ என்ற கருவியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
சென்னை ஐஐடி, தீர்த்தா என்ற தனியார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதன் முடிவில் நீரோ என்ற கருவி கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கருவியின் மூலம் தினமும் 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் எடுக்கலாம். இந்த கருவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் புதன்கிழமை இருதரப்புகளும் கையொப்பம் இட்டுள்ளன. சிறிய அளவிலான இக்கருவி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சூரிய மின் சக்தியில் இயங்குவதால், இதனைப் பயன்படுத்தும்போது அதிகச் செலவு ஏற்படாது, குறைவான பராமரிப்புச் செலவு மட்டுமே இருக்கும்.
தொழில் துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சிப் பிரிவின் டீன் ரவீந்திரன் கூறுகையில், தொலைதூரப் பகுதிகள் மற்றும் தண்ணீர் கிடைக்காத இடங்களில் உள்ள மக்கள் மத்தியில் இந்த கருவி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.
தீர்த்தா நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி துர்கா தாஸ் கூறுகையில், “வளிமண்டல ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருக்கிறோம். நமது தேசிய முக்கியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். நீரோ மூலம் தண்ணீர் பஞ்சமுள்ள பல மில்லியன் மக்கள் வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொண்டு வருகிறோம். வெகுஜனங்களிடையே தாக்கத்தை உருவாக்குவதுதான் எங்களது இலக்கு. 14 ஆண்டுகளுக்கு முன்பே காற்றின் ஈரப்பதத்தைப் பயன்படுத்தித் தண்ணீர் எடுக்கும் முறையில் இக்கருவி வடிவமைக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இப்போது மின்சார வசதி இல்லாமல் சூரிய மின்சக்தியில் இயங்கும் கருவி உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.�,