ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி அந்நிய முதலீட்டுக்கான அனுமதி பெற்றுத் தருவதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவரைக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கார்த்தியைக் காவலில் எடுத்து விசாரிக்க ஏற்கெனவே சிபிஐக்கு இரண்டு முறை அனுமதி வழங்கிய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த 6ஆம் தேதி மேலும் 3 நாள்கள் (மார்ச் 9) வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
நீதிமன்றத்தில் தனது வாதத்தின்போது, கார்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டையே சிபிஐ முன்வைத்தது. இந்த நிலையில், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று (மார்ச் 7) மனுத் தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்திராணி மற்றும் கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஆகியோரை நீதிமன்றக் காவலில் இருந்து எடுப்பதற்கும் அனுமதிக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுக்கள் மார்ச் 9ஆம் தேதி, சிறப்பு நீதிபதி சுனில் ராணா முன்னிலையில் விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தேதி சிபிஐ காவல் முடிந்து கார்த்தியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.�,