காரணம் தெரியவில்லை: நீக்கம் குறித்து கராத்தே தியாகராஜன்

Published On:

| By Balaji

‘‘நான் காங்கிரஸிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது ஏன்?” என்று கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸிலிருந்து தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று (ஜூன் 27) அறிவிப்பு வெளியிட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் பேசியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நேரு கூறியிருந்ததும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்கியது. இந்த நிலையில்தான் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக நாம் [திமுக அழுத்தம்: காங்கிரஸிலிருந்து கராத்தே நீக்கம்!](https://minnambalam.com/k/2019/06/27/58) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், “கராத்தே நீக்கம் பற்றி முன்னரே அறிந்த சில காங்கிரஸ் புள்ளிகள், கே.எஸ்.அழகிரியை தொடர்புகொண்டு, ‘கே.என்.நேருவும் விளக்கம் கொடுத்திட்டாரு. கராத்தேவும் தனிப்பட்ட கருத்துதான்னு சொல்லிட்டாரு. அப்புறம் எதுக்கு அவர் மேல் நடவடிக்கை எடுக்கணும்?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அழகிரி, ‘கட்சிக்குள்ள எந்த பிரச்சினையும் இல்ல. கராத்தேவை நீக்கியே ஆகணும்னு திமுக தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்குறாங்க. அவர நீக்கலேன்னா திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கே ஆபத்துனு சொல்றாங்க. அதனால, திமுகவ சமாதானப்படுத்ததான் இந்த தற்காலிக நடவடிக்கை’ என்று பதிலளித்துள்ளார்.”எனக் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் ஊடகத்தினருக்கு பேட்டியளித்த கராத்தே தியாகராஜன், தன்னை நீக்கியது காங்கிரஸுக்கு உள்ளிருந்து கொடுக்கப்பட்ட அழுத்தமா அல்லது வெளியிலிருந்து வந்த அழுத்தமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய கராத்தே தியாகராஜன், “வாழப்பாடி ராமமூர்த்தி, தங்கபாலு ஆகியோர் தலைவர்களாக இருந்த சமயத்திலும் நான் நீக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், தற்போது எதற்காக நீக்கினார்கள் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவோ சோனியா, ராகுல் ஆகியோர் குறித்தோ நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. உட்கட்சிக் கூட்டத்தில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தேன். அதற்கான உரிய விளக்கத்தை அளித்துவிட்டேன். நாம் மதிக்கும் ப.சிதம்பரம் உள்பட சில காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த பிறகு என்னுடைய முழு விளக்கத்தையும் அளிக்கலாம் என்றிருக்கிறேன்.” என்று கூறினார்.

என்றைக்குமே ராகுல் காந்திக்கு விசுவாசமாக இருப்பேன், காங்கிரஸில்தான் இருப்பேன் என்று தெரிவித்த கராத்தே தியாகராஜன், “எந்த அழுத்தத்தில் என்னை நீக்கும் முடிவை எடுத்தனர் எனத் தெரியவில்லை. காங்கிரஸுக்கு உள்ளிருந்து வந்த அழுத்தமா அல்லது காங்கிரஸ் வெளியிலிருந்து வந்த அழுத்தமா என்பதை விசாரித்துவருகிறேன். இதுகுறித்து முழுமையாக நாளை கூறுகிறேன். கட்சியிலிருந்து என்னிடம் விளக்கம் எதுவும் கேட்கவில்லை. துணைத் தலைவர் தாமோதரன் என்னை அழைத்து விளக்கக் கடிதம் எழுதித் தாருங்கள் என்று மட்டும் கேட்டார்” என்றும் குறிப்பிட்டார்.

“காங்கிரஸின் உட்கட்சிக் கூட்டத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று பேசினேன். வெளியில் நடைபெற்றக் கூட்டத்தில் எதுவும் பேசவில்லை. என்னைப் போன்று பலரும் தனித்துப் போட்டியிட வேண்டுமென அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினர்” என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸில் நான் இருப்பதே சிலருக்கு இடைஞ்சலாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

“நாளை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் எதனையும் மூடிமறைக்காமல் என்னுடைய பாணியில் அனைத்து கேள்விகளுக்கும் கட்டாயம் பதிலளிக்கிறேன்” என்று தனது பேட்டியை முடித்துக்கொண்டார் கராத்தே தியாகராஜன்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிபி – தலைமைச் செயலாளர்: எடப்பாடியின் புதிய ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/27/57)**

**[திமுக அழுத்தம்: காங்கிரஸிலிருந்து கராத்தே நீக்கம்!](https://minnambalam.com/k/2019/06/27/58)**

**[சபரீசன் பேச்சு: சிக்கிய ஆடியோ!](https://minnambalam.com/k/2019/06/26/26)**

**[டிஜிட்டல் திண்ணை: தமிழக முதல்வராகும் அமித் ஷா?](https://minnambalam.com/k/2019/06/26/90)**

**[முன்பதிவு: இளையராஜா போட்ட நிபந்தனை!](https://minnambalam.com/k/2019/06/27/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share