150-பேரை பலிகொண்ட கான்பூர் ரயில் விபத்தில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர்-20 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் பாட்னா – இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு புர்கராயான் என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 150 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கடந்த நவம்பர்-28 ஆம் தேதி கான்பூர் அருகே 5௦ மீ தொலைவில் சீல்டா-அஜ்மீர் விரைவு (ரயில் எண் 12988) ரயிலின் 15 பெட்டிகளின் தடம்புரண்டது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஒரே மாதத்தில் இரு ரயில் விபத்துகள் நடந்தது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர் இவ்விரு ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், உ.பி. மற்றும் பீகார் மாநில காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
முதலில் இந்த விபத்துக்கு ரயில்வேயின் அலட்சியமும், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலும் தான் காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இதற்கு பின்னணியில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்தியா – நேபாளம் எல்லை மோதிகாரியில் இருந்து குற்றவாளிகளான உமாசங்கர் படேல், மோதிலால் பஸ்வான் மற்றும் முகேஷ் யாதவ் ஆகிய மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்ததில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் துபாயில் இருந்து கொண்டு பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பீகார் மாநில எஸ்.பி. ஜிதேந்தர் ரானா கூறியதாவது: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி கோராசாகான் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் குக்கர் வெடிகுண்டை வைத்த விவகாரம் தொடர்பாக இம்மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் இணைந்து பணியாற்றியதாக வாக்குமூலம் கொடுத்தனர் என்றும் இந்தூர்- பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் அஜ்மீர் – சீல்டா எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில் விபத்துக்குள் ஏற்பட்ட பகுதியில் வெடிப்பொருட்களை வைத்ததாக வாக்குமூலம் அளித்தனர் என்று கூறியுள்ளார்.
எனவே இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது.
�,