பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக குஜராத் அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் “யுத்தத்தை”த் தொடங்கியுள்ளனர்.
குஜராத்தின் கட்ச் பிராந்தியத்தில் ரான் ஆப் கட்ச் என்பது உவர்நிலப் பகுதி. 100 கிமீக்கும் மேலாக விரிந்து பரந்து கிடக்கும் இந்த ரான் ஆப் கட்ச் என்பது மனிதர்கள் வாழத் தகுதியற்ற சூனியப் பிரதேசம்.
மழைக் காலங்களில் கடல் நீர் நிறைந்த சதுப்பு நிலமாகவும் கோடை காலங்களில் பாலைவன பிரதேசமாகவும் ரான் ஆப் கட்ச் காட்சியளிக்கும். இந்த ரான் ஆப் கட்ச் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியது. ரான் ஆப் கட்ச்சை ஊடறுத்துப் போடப்பட்டிருக்கும் மண்பாதையைக் கடந்து வனாந்தரத்தில்தான் நமது ராணுவ வீரர்கள் எல்லையைக் காவல் காக்கின்றனர்.
1965ஆம் ஆண்டு யுத்தத்தின்போது பாகிஸ்தான் முதலில் தாக்கி கைப்பற்றிய இடமும் ரான் ஆப் கட்ச்தான். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் எவரும் இதுவரை சென்று பார்வையிடாத ஓர் எல்லைப் பகுதி இது.
இப்பகுதியில் இயற்கையாகவே உப்பு படிமங்கள் உறைந்து கிடக்கின்றன. இதனையொட்டிய கோரி கிரீக் எனும் நீரிணைப் பகுதியும் உப்பு படிமங்கள் கொண்டது. இந்த கோரி கிரீக்கில் இருந்து 33 கிமீ தொலைவில் உள்ள சர் கிரீக் நீரிணை இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சர்ச்சைக்குரிய பகுதி. இது தொடர்பாக இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ரான் ஆப் கட்ச் மற்றும் கோரி கிரீக் உப்பு படிமங்களை வெட்டி எடுத்து உப்பைப் பிரித்து 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சிறு தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. இதில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில்தான் திடீரென குஜராத் அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. அதாவது ரான் ஆப் கட்ச் மற்றும் கோரி கிரீக் பகுதியில் உள்ள இயற்கை உப்பு படிமங்களையும் அதனில் இருந்து புரோமைனை பிரித்தெடுத்தும் ஏற்றுமதி செய்ய சோலாரிஸ் கெம்டெக் என்ற நிறுவனத்துக்கு அனுமதி அளித்திருக்கிறது. இதனால் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
இதில் பெரிய கூத்து என்னவென்றால் குஜராத் அரசின் உத்தரவில் புரோமைனில் இருந்துதான் இயற்கை உப்பு தயாரிக்கப்படுவதால் அதை ஏற்றுமதி செய்யலாம் எனக் கூறி இருப்பதுதான். உண்மையில் இயற்கை உப்பு படிமங்களில் இருந்துதான் புரோமைன் உப பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த உண்மையைச் சிறு தொழில்முனைவோர் சுட்டிக்காட்டியும்கூட குஜராத் அரசு, மனு கொடுங்கள் ‘ஆகட்டும்’ பார்க்கலாம் என அலட்சியப் பதில் தந்து கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.�,