மகாத்மா காந்தியின் 149ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 02) கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்குக் காரணமாக இருந்ததற்காகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தை அகிம்சை வழியில் மேற்கொண்டதற்காகவும், காந்தியடிகள் தேசப்பிதாவாகப் போற்றப்படுகிறார்.
அவர், சுதந்திர விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நாட்டு மக்களை ஒருங்கிணைத்தார்.
காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட்டில் அமைந்திருக்கும் அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், சென்னையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இவர்களைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டியில் உள்ள காந்தி சிலைக்கு நடிகர் சரத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் கிரண்பேடி,முதல்வர் நாரயணசாமி,புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.�,”