காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்புடைய 687 பக்கங்களை ஃபேஸ்புக் முடக்கியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் நடவடிக்கை காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நடைபெற பத்து தினங்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது, சமீபத்தில் மக்களவைத் தேர்தலின் போது சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், தவறான கருத்துகளை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற குழு தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து தேர்தலுக்காகப் பொதுக்கூட்ட பிரச்சாரங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், வீடியோ, மீம்ஸ், புகைப்படம் ஆகிய வடிவங்களில் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸுக்கு தொடர்புடைய 687 பக்கங்களை முடக்கி ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
இதுகுறித்து, ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணையப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் குழுவின் தலைவரான நாதனைல் க்ளெய்ச்சர், இந்த பக்கங்களில் போலி கணக்குகள் பல இணைந்துள்ளன. இந்த பக்கங்கள் மீது நம்பகத் தன்மை இல்லாததால் அவற்றை முடக்க முடிவு எடுத்தோம். இவை அனைத்தும் காங்கிரஸின் ஐடி விங்கிற்கு தொடர்புடையதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஃபேஸ்புக் தளத்தில் இயங்கி வரும் போலி கணக்குகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த நாதனைல் க்ளெய்ச்சர் பாகிஸ்தான் ராணுவத்தின் இன்டர்-சர்வீஸ் பப்ளிக் ரிலேஷன் துறை ஊழியர்களுடன் தொடர்பு இருப்பதாக 104 குழுக்கள் மற்றும் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
687 ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளர்கள், உள்ளூர் செய்தி, அரசியல் நிகழ்வுகள், பாஜகவுக்கு எதிராக விமர்சனங்கள் ஆகியவற்றைப் பதிவிட்டு வந்ததாகத் தெரிகிறது.�,