மனைவிக்கும் மகளுக்கும் தர வேண்டிய ஜீவனாம்ச தொகையைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தருவதாகச் சொன்ன நடிகரின் பதில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.6,000 ஏழைகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டார், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மத்தியப் பிரதேசம், இந்தூரைச் சேர்ந்த ஆனந்த் சர்மா என்பவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தரப்படும் குறைந்தபட்ச ஊதிய தொகையைப் பிரிந்த தனது மனைவிக்கு ஜீவனாம்ச தொகையாகத் தருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஆனந்த் சர்மாவுக்கு 2006இல் தீப்மாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்பப் பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த நிலையில் தீப்மாலா, கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரி இந்தூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடந்துவரும் நிலையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது, மனைவிக்கும் மகளுக்கும் ஜீவனாம்சம் தொகையாக ரூ.4,500 வழங்க உத்தரவிட்டதுடன், இது தொடர்பாகப் பதில் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதையடுத்து, ஆனந்த் சர்மா நீதிமன்றத்தில் அளித்த பதிலில், நான் தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறேன். எனக்கு ரூ.5,000 முதல் ரூ.6,000 வரைதான் ஊதியம் கிடைக்கிறது. இதை வைத்துத் தான் என் குடும்பத்தைப் பார்த்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அளிக்கப்படும் குறைந்தபட்ச ஊதிய தொகையிலிருந்து என் மனைவிக்கு ஜீவனாம்ச தொகையை அளித்துவிடுகிறேன். அதுவரை இந்த உத்தரவை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இவரது பதில் வியப்பை ஏற்படுத்தினாலும் , அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது.
�,