தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கட்சியில் இருக்கும் தலித்துகளையும், கட்சியின் எஸ்.சி., எஸ்.டி. பிரிவையும் மதிப்பதே இல்லை என்று எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸின் எஸ்.சி. எஸ்.டி. பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (நவம்பர் 5 ) திருச்சியில் கூடியது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் திருநாவுக்கரசரும் கலந்துகொள்வதாக இருந்தது.
அதற்கேற்றவாறு திருச்சியில் நேற்று தனக்கு சில நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டார் திருநாவுக்கரசர். தனது ஆதரவாளரான காட்டூர் சேகர் இல்லத் திருமண விழா, முன்னாள் போலீஸ் ஐ.ஜி. பொன்.பரமகுரு பேரன் இல்ல விசேஷம் ஆகிய நிகழ்வுகளிலும் திருநாவுக்கரசர் கலந்துகொள்வதாக இருந்தது.
ஆனால் அவருக்கு நெருக்கமான சிலர், ‘உங்கள் முன்னிலையிலேயே உங்களை குறை சொல்ல போகிறார்கள்’ என்று தகவல் கொடுக்க எஸ்.சி, எஸ்.டி. பிரிவு கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்க்க தனது திருச்சி பயணத்தையே ரத்து செய்துவிட்டார் திருநாவுக்கரசர்.,
ஏற்கனவே உறுப்பினர் கார்டு விவகாரத்தில் செல்வப் பெருந்தகைக்கும், திருநாவுக்கரசருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. சமீபத்தில் நடந்த பி.சி.சி. (பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி) உறுப்பினர் தேர்வு தொடர்பாகவும் திருநாவுக்கரசர் மீது கடும் அதிருப்தி அடைந்திருக்கிறார் செல்வப் பெருந்தகை.
’’எஸ்.சி,.எஸ்.டி. பிரிவில் இருக்கும் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் பி.சி.சி. உறுப்பினர் பதவி வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் செல்வப் பெருந்தகை. ஆனால் 4 % மட்டுமே பி.சி.சி. உறுப்பினர் பதவியை வழங்கியிருக்கிறார் திருநாவுக்கரசர். பின்னே எப்படி அவரை வாழ்த்துவது?’’ என்று கேட்கிறார்கள் எஸ்.சி,எஸ்.டி.அணியினர்.
இந்தக் கோபமெல்லாம் நேற்றைய செயற்குழுக் கூட்டத்தில் வெடித்திருக்கிறது.
‘’தமிழக காங்கிரஸ் கமிட்டி காங்கிரசில் உள்ள தலித்துகளை வஞ்சிக்கிறது. ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் என்பது பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்றே அழைக்கப்பட்ட நிலை இருந்தது. அப்போது காங்கிரசில் அவ்வளவு தலித் தலைவர்களும் தொண்டர்களும் இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு வேராக இருந்தவர்கள் தலித்துகள். ஆனால் இப்போதைய தலைமை தலித்துகளை மதிக்கவே இல்லை. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாடு எஸ்.சி,எஸ்.டி. காங்கிரஸ் தனித்துவமாகவே செயல்பட வேண்டியிருக்கும்’’ என்று இந்தக் கூட்டத்தில் எச்சரித்துள்ளார் செல்வப் பெருந்தகை.
இதுபற்றி நாம் திருநாவுக்கரசரின் ஆதரவாளர்களிடம் பேசினோம்.
‘’சில மாதங்களுக்கு முன் நடந்த திருநாவுக்கரசரின் பொன் விழா நிகழ்வுக்கு தலைமை தாங்கியதே செல்வப் பெருந்தகைதான் . இப்போது ஏன் திடீரென எதிர்க்கிறார் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் எஸ்.சி,எஸ்.டி. பிரிவில் மட்டுமல்ல பல நிலைகளிலும் பேரண்ட் பாடியிலும் தலித்துகள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பி.சி.சி. பதவி கொடுக்க வேண்டியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு துணை அமைப்புக்கும் உரிய அங்கீகாரம் அளித்து பட்டியல் தயார் செய்தார் அரசர். இதை தேசியத் தலைமையே பாராட்டியிருக்கிறது” என்கிறார்கள்.
-ஆரா
�,”