கெஜ்ரிவால்…கெஜ்ரிவால் என வடக்கே உள்ள இளைஞர்கள் இப்போது முஷ்டி மடக்கி, பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள். 30வருடங் களுக்குமுன்னே அசாமில் ஒரு கெஜ்ரிவாலை அங்குள்ள வாக்காளர்கள் கண்டெடுத்து உலகுக்குக் காட்டிய வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்.
அந்த கெஜ்ரிவாலின் பெயர் பிரபுல்ல குமார் மகந்தா. அவர் மாணவராக இருந்தபோது ஆட்சியாளர்களுக்கு எதிராக சக தோழர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தி வெற்றிபெற்றார். தனது மாணவர் அமைப்பை, அசாம் கன பரிஷத் எனப் பெயர் மாற்றிக்கொண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர் பதவியைப் பிடித்து சாதனை நிகழ்த்தினார்.
மாணவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிப்பதாக இன்று திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை அளித்த மாநிலமான அசாமில், தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.வடகிழக்கு மாநிலமான அசாமில், இன்று மாணவர் போராட்டம் ஓய்ந்திருந்தாலும் உல்பா உள்ளிட்ட தீவிரவாதிகள் ஆதிக்கம் மாநிலம் முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பசுமைப் பிரதேசம் அசாம். இந்த மாநிலம் காங்கிரஸ் கட்சியின் கோட்டை.நாடு விடுதலை அடைந்தபின், இதுவரை நடைபெற்ற 13 தேர்தல்களில் 10 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. 2 முறை அசாம் கன பரிஷத் கட்சியும், ஒரே ஒருமுறை ஜனதா கட்சியும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளன.
தற்போதய காங்கிரஸ் முதல்வரான தருண்கோகாய் 3வது முறையாக முதல்வர் பதவியில் நீடிக்கிறார். இங்கு மொத்தம் 126 தொகுதிகள் உள்ளன. மும்முனைப் போட்டி நிலவுகிறது.காங்கிரஸ் கட்சி 122 தொகுதிகளில் களமிறங்க, அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய மக்கள் கட்சி 4 இடங்களில் போட்டியிடுகிறது. மூன்றுமுறை தொடர்ச்சியாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் தருண்கோகாயை வீழ்த்தியே தீருவது என சபதம் எடுத்துள்ள பாஜக, பலமான கூட்டணியை உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருந்த அசாம் கன பரிஷத், போடோ மக்கள் மத்தியில் செல்வாக்குபெற்ற போடோலாந்த் மக்கள் முன்னணி ஆகிய பலம்வாய்ந்த கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கிறது பா.ஜ.க. 84 தொகுதிகளில் போட்டியிடும் இந்த தேசியக் கட்சி, மீதமுள்ள இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்தளித்துள்ளது.
3வது அணியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தனித்துக் களம் இறங்குகிறது.காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் தருண்கோகாய் அறிவிக்கப்பட, சர்பானந்தா சோனோவால் பா.ஜ.க-வின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அசாமில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 4ம் தேதியில் முடிந்து விட 2ம் கட்ட தேர்தல் 11ம் தேதி நடைபெற உள்ளது.
தற்போது, தேர்தல் நடைபெறும் 5மாநிலங்களில் கேரளா மற்றும் அசாமில் காங்கிஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது.கேரளாவில் காங்கிரஸ் தேறாது என அனைத்து கருத்துக் கணிப்புகளும் முதல்வர் உம்மன்சாண்டிக்கு பீதியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அசாமிலும் அதே வானிலை அறிக்கையைப் படிக்கிறார்கள் கணிப்பாளர்கள். டைம்ஸ் நவ் மட்டும் அசாமில் தொங்கு சட்டசபை அமையும் எனக்கூறி காங்கிரசைத் தேற்றியுள்ளது.
இதைப் பயன்படுத்தி, அசாமில் நான்தான் கிங்
மேக்கராக இருப்பேன் என்கிறார், 3வது அணியான ஐக்கிய ஜனநாயக முன்னணித் தலைவரான பத்ருதீன் அஜ்மல். வாக்குப்பதிவு முடியும் முன்னரே அசாமில் தொடங்கிவிட்டது குதிரை பேரம்.
-மாடக்கண்ணு�,