பாலிவுட் நடிகரான சத்ருகன் சின்ஹா கடந்த முப்பது ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார். அண்மைக்காலமாக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜக அரசின் போக்கை சத்ருகன் சின்ஹா தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர் சத்ருகன் சன்ஹா. ஆனால், வரும் மக்களவைத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து சத்ருகன் சின்ஹா காங்கிரஸில் இணைகிறார். மேலும் பாட்னா சாஹிப் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சத்ருகன் சின்ஹா போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுவும் அறிவித்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸில் சத்ருகன் சின்ஹா இணைவது குறித்து அவரது மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து *ஏஎன்ஐ* செய்தி நிறுவனத்திடம் பேசிய சோனாக்ஷி சின்ஹா, “பாரதிய ஜனதா கட்சியில் சத்ருகன் சின்ஹாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. அவர் பாஜகவை விட்டு தாமதமாக வெளியேறியுள்ளார். நீண்டகாலத்திற்கு முன்பே அவர் விலகியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.�,