~கள்ளத் துப்பாக்கி: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Balaji

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையைத் தடுக்கக் கோரித் தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தமிழகத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனை அதிகரித்திருப்பதாகக் கூறி, மதுரை நாகனாகுளத்தைச் சேர்ந்த கார்மேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். “வடமாநிலங்களில் கள்ளத் துப்பாக்கி புழக்கம் அதிகம் இருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து ரயில், பேருந்துகளில் கள்ளத் துப்பாக்கிகள் கடத்தி வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. ஆகவே, கள்ளத் துப்பாக்கி விற்பனையையும் புழக்கத்தையும் முழுமையாகத் தடுக்க, இது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும்” என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, இந்த மனுவுக்குப் பதிலளிக்குமாறு மத்திய உள் துறைச் செயலாளர், தேசியப் புலனாய்வு முகமை, சிபிஐ ஆகியவற்றுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 8) இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ராம திலகம் அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் பயன்படுத்தியதாகப் பதிவான வழக்குகள் எத்தனை? அது தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்னென்ன பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, அவற்றில் தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட வழக்குகள் எத்தனை?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்துப் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தூத்துக்குடியில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய அதிகாரியிடம் இருந்து 9 அமெரிக்க வகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட வழக் கின் நிலை என்ன என்று கேட்ட நீதிபதிகள், அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

“ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? இது தொடர்பான வழக்குகளைக் கையாள மாநில அரசுகளுக்கு உள்ள வரம்புகள் என்ன? சட்டவிரோத ஆயுதம் தொடர்பான வழக்குகளை தேசியப் புலனாய்வு முகமை தாமாக முன்வந்து விசாரிக்கும் பொறுப்பைச் செயல்படுத்துகிறதா?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து மத்திய அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கு மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share