கல்லூரி சந்திப்பு: ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Published On:

| By Balaji

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவர்களுடன் நடத்திய சந்திப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறது பாஜக.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அன்று மாலையில் குமரிக் கூட்டத்துக்கு செல்லும் முன்னர் காலையில் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் மாணவிகளின் கூட்டத்தில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மாணவிகளும் ராகுலும் நடத்திய உரையால் சமூக தளங்களில் பெருமளவில் பரவியது.

இந்த நிலையில் கல்லூரியில் ராகுல் காந்தி கலந்துகொண்ட நிகழ்ச்சி குறித்து விசாரிக்குமாறு தமிழக கல்லூரிக் கல்வித் துறை இணை இயக்குனருக்கு, கல்லூரிக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். இதற்கு முன்பே தமிழக பாஜக இளைஞரணித் தலைவரான வினோஜ் தேர்தல் ஆணையத்தில் ராகுல் காந்தி மீதும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி மீதும் புகார் கொடுத்திருக்கிறார்.

அந்தப் புகாரில், “நடப்பு தேர்தல் நன்னடத்தை விதி 12 இன் படி கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் நிகழ்வுகள், பொதுக்கூட்டங்கள் நடப்பதை நிபந்தனைகளுக்கு உட்பட்டே அனுமதிக்கிறது தேர்தல் ஆணையம். பொதுக் கூட்டங்கள் நடத்த மைதானங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டால் மட்டுமே கல்வி நிறுவனங்களைப் பயன்படுத்தலாம் என்று தேர்தல் நன்னடத்தை விதிகள் சொல்கின்றன. அதுவும் கல்வி நிறுவனங்களின் மைதானங்களை பொதுக்கூட்டங்களுக்குப் பயன்படுத்த மட்டுமே இந்த அனுமதி தரப்பட்டிருக்கிறது.

கல்வி நிறுவனங்களில் மாணவர்களைத் திரட்டி பரப்புரை நடத்துவதற்கு தேர்தல் நடத்த விதிகள் அனுமதிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் சலுகையை தவறாகப் பயன்படுத்தி ராகுல் காந்தியும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரி நிர்வாகமும் கல்லூரி மாணவிகளை தங்கள் அரசியல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திரமோடி மீது ரஃபேல் விவகாரம் தொடர்பாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் பிற்சேர்க்கை 5 இல், ‘சரிபார்க்கப்படாத புகார்களின் அடிப்படையில் பிற கட்சியினர் மீது விமர்சனங்கள், கூறக் கூடாது’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ரஃபேல் விவகாரம் இப்போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், சரிபார்க்கப்படாத புகார்களின் அடிப்படையில் ராகுல் காந்தி பாஜக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

எனவே அரசியல் அமைப்புச் சட்டம் 324 இன்படி தேர்தல் ஆணையம் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, சரிபார்க்கப்படாத புகார்களின் அடிப்படையில், அதுவும் நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும்படியாக பேசுவதற்கு காங்கிரஸ் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அந்த புகாரில் வலியுறுத்தியிருக்கிறார் வினோஜ்

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share