கல்லூரிகளைப் பாதுகாப்பான இடங்களாக மாற்ற வேண்டும்!

Published On:

| By Balaji

கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், கல்லூரிகளைப் பாதுகாப்பான இடங்களாக மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட இரு பேராசிரியைகள் மாணவியை மிரட்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ள ராமதாஸ், பேராசிரியர் தங்க பாண்டியனின் அத்துமீறலுக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த பேராசிரியைகளின் தரம் தாழ்ந்த செயலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “கல்லூரிகளில் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று அஞ்சி நடுங்கும் வகையில்தான் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் நடந்துள்ள நிகழ்வுகள் அமைந்துள்ளன. மாணவிகள் தங்கியுள்ள விடுதிக்குள் பேராசிரியர்கள் உள்ளிட்ட எந்த ஆண்களும் சாதாரணமான நேரங்களில் செல்லக்கூடாது என்பதுதான் விதியாகும். விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகளைப் பாதுகாக்க வேண்டியது காப்பாளர்களின் கடமை ஆகும். ஆனால், திருவண்ணாமலைக் கல்லூரியில் அனைத்தும் தலைகீழாக நடந்து கொண்டிருக்கின்றன” எனக் கூறியுள்ளவர், மாணவி துன்புறுத்தப்பட்டதையும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிபதி விசாரணையில் தெரியவந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களுக்குக் கடவுளர்களாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் அப்படித்தான் இருந்தார்கள். பேராசிரியர்களும், பேராசிரியைகளும் மாணவ, மாணவியருக்குத் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அன்பும், கண்டிப்பும் காட்டி மாணவர்களின் வளர்ச்சிக்குத் துணையாக இருந்தனர். ஆனால், இப்போது நிர்மலா தேவி, புனிதா, மைதிலி போன்ற பேராசிரியைகள், தங்க பாண்டியன் போன்ற பேராசிரியர்களின் கீழ்த்தரமான செயல்பாடுகளால் ஆசிரியர் சமுதாயம் மீதான மதிப்பும், மரியாதையும் குறைந்து வருகிறது. அப்பழுக்கற்ற உன்னதமான ஆசிரியர்களையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நிலைமை மாற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் பெண்களின் எண்ணிக்கை இப்போதுதான் அதிகரித்து வருகிறது. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த நமது மக்கள் இப்போதுதான் தங்கள் வீட்டு பெண் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் கல்லூரி செல்லும் பெண்களுக்கு இத்தகைய ஆபத்துகள் இருப்பதாக அறிந்தால், பெரும்பான்மையான பெற்றோர் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பவே தயங்குவார்கள். அது மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக அமையும். எனவே, பேராசிரியர்கள் என்ற போர்வையில் நடமாடும் சில மனித விலங்குகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வித் துறையில் கடுமையான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் கல்விக்கூடங்களை பாதுகாப்பு நிறைந்த கல்விக் கோயில்களாக மாற்ற வேண்டும். அப்போது தான் மகளிர் சமுதாயம் கல்வி கற்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பார்கள். இவற்றைக் கருத்தில்கொண்டு பாதுகாப்பான சூழலில் பெண்கள் கல்வி கற்பதை உறுதி செய்ய தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share