திமுக தலைவர் ஸ்டாலின், தான் பிரச்சாரம் செல்லும் இடங்களிலெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடநாடு விவகாரம், ஜெயலலிதா மரண மர்மம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுவருகிறார்.
இந்த நிலையில் குன்னூரில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 8) நடந்த பிரச்சாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என்று எண்ணிய ஸ்டாலின், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் இரண்டு வருடங்கள் வீட்டிலேயே சிறை வைத்திருந்தார். கருணாநிதிக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாகப் பேசியிருப்பார். கருணாநிதி வீட்டில் சிறை வைக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றிரவு சங்கரன்கோவிலில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி மக்களவைத் தொகுதிக்கான திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை நடத்தினார். அப்போது அவர், “அம்மையார் ஜெயலலிதாவின் மரணம் என்பது மர்மமான நிலையில் உள்ளது. சிந்துபாத் கதைபோல செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. முதலமைச்சராக இருக்கும்போது இறந்தவர் ஜெயலலிதா. நம்மை ஆளாக்கிய நம்முடைய தலைவர் அறிஞர் அண்ணா முதல்வராக இருக்கும்போது இறந்தார்.
எம்ஜிஆரும் முதல்வராக இருக்கும்போது இறந்தார். ஆனால் நம்முடைய தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும்போது இறக்கவில்லை. வயது மூப்பின் காரணமாக தனது இல்லத்தில் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு, அதன்பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மருத்துவமனையிலிருந்து காலையிலும், மாலையிலும் செய்திக் குறிப்புகள் வந்ததா இல்லையா?
என்ன சிகிச்சை, உடல்நலம், எத்தனை மருத்துவர்கள் கவனிக்கின்றனர் என்பது பற்றி நானே பலமுறை வெளியேவந்து தலைமைக் கழகத்தின் சார்பில் தகவல்களை வெளியிட்டேன். ஆனால் கலைஞர் அப்போது முதல்வர் அல்ல. அண்ணாவும், எம்ஜிஆரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் சிகிச்சை, உடல்நலம் குறித்த செய்திகள் தினசரி வெளியாகியது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்ன நிலை என செய்திகள் வந்தனவா?
சில அமைச்சர்கள் வெளியே வந்து விதவிதமாகச் சொன்னார்கள். அம்மா உப்புமா சாப்பிட்டார், டிவி பார்த்தார், செய்தித்தாள் படித்தார் என்றெல்லாம் சொன்னார்கள். அதுவும் ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்கள்” என்று பேசினார்.�,