]கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி

Published On:

| By Balaji

ஜூன் 7 ஆம் தேதி சேலத்தில் உயர் மட்ட மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிகழ்ச்சியில் சேலம் எம்.பி.யான திமுகவைச் சேர்ந்த பார்த்திபனுக்கும், சேலம் மாவட்டத்திலுள்ள ஒரே திமுக எம்.எல்.ஏ.வான பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் பார்த்திபன் அவர்களே, ராஜேந்திரன் அவர்களே என்று அழைத்து உரிய மரியாதை அளித்த முதல்வர் மேடையில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் பாலத்தை ரிப்பன் வெட்டித் திறக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது எம்.பி. இல்லாததைக் கண்டு அவரை அழைத்து வரச் சொன்னார். திமுக எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் வரும் வரை சில நிமிடங்கள் காத்திருந்து அவர்கள் வந்த பின்னரே ரிப்பன் வெட்டி பாலத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

எதிர்க்கட்சியான திமுகவின் எம்.பி, எம்.எல்.ஏ. வை விழாவுக்கு அழைத்து பெருமைப்படுத்தியது முதல்வரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று பல்வேறு பத்திரிகைகளும் செய்திகள் வெளியிட்டன.

இந்நிலையில் நிகழ்ச்சியெல்லாம் முடிந்து ரிலாக்ஸாக சேலம் கலெக்டர் ரோகிணியை அழைத்துப் பேசியிருக்கிறார் முதல்வர்.

**“பார்த்திபன் எம்.பி. தேர்தல்ல ஜெயிச்சவருதான். ஆனா அவர் இன்னும் எம்.பி.யாக பதவி ஏத்துக்கல. பார்லிமெண்ட்டே இன்னும் கூடலை. அதுக்குள்ள அவரை அரசு விழாவுக்கு கூப்பிட்டது யாரு? எனக்குத் தெரியாமலேயே இங்க இன்னும் என்னென்ன நடக்குது?”** என்று கடுமையான குரலில் கேட்டிருக்கிறார். அதற்கு கலெக்டர் தரப்பில், “உங்களுக்கு நல்லபெயர் கிடைக்கணும்னுதான் அப்படி செஞ்சோம்” என்று பதில் சொல்லியிருக்கிறார்கள். மேலும் அதிமுகவின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம்தான் திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வை தொலைபேசி மூலம் அழைத்தார் என்றும் கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

கலெக்டரை அடுத்து மாவட்ட பி.ஆர்.ஓ.வையும் அழைத்த முதல்வர்.** “ஒரு சிஎம் ஃபங்ஷன் நடக்குது. அதோட நிகழ்ச்சி நிரல் என்ன, யார் யாரு கலந்துகிறாங்க, அதிகாரிகள் பேர் என்னன்னு எனக்கு முன் கூட்டியே சொல்ல மாட்டீங்களா?’ **என்று கேட்டிருக்கிறார் எடப்பாடி. பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது அவருக்கு நிகழ்ச்சி நிரல் பட்டியலே கொடுக்கப்படவில்லை. அதனால் சில அதிகாரிகள் பெயரைக் கூட கேட்டுக் கேட்டே உச்சரித்தார் முதல்வர். இதற்காக பி.ஆர்.ஓ.வுக்கும் டோஸ் விட்டிருக்கிறார் எடப்பாடி. **‘கலெக்டர்தான் நிகழ்ச்சி நிரலை கடைசி வரைக்கும் கான்பிடென்ஷியலா வைக்கச் சொன்னார்’ என்று பி.ஆர்.ஓ. சொல்லியிருக்கிறார். ‘எனக்குமாய்யா காட்டாம வைக்கச் சொன்னாங்க?’ என்று கோபத்திலும் சிரித்துவிட்டாராம் முதல்வர்.**

இந்தச் சூழலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலத்தை விட்டு புறப்பட்ட நிலையில், திமுக எம்.பி. பார்த்திபன் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டர் ரோகிணியை சந்தித்துப் பேசியிருக்கிறார். தகவல் கிடைத்து செய்தியாளர்கள் கலெக்டர் அலுவலகம் சென்று பார்த்திபனிடம் பேச, “எம்.பி. ஆன பிறகு மரியாதை நிமித்தமா கலெக்டர் மேடத்தைப் பார்க்க வந்தேன். வேற ஒண்ணுமில்லை” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

**

மேலும் படிக்க

**

**

[மத்திய அமைச்சரவையில் திமுக? டி.ஆர்.பாலு](https://minnambalam.com/k/2019/06/09/52)

**

**

[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)

**

**

[ஓபிஎஸ்சை கை கழுவும் கேபிஎம்](https://minnambalam.com/k/2019/06/09/53)

**

**

[முகிலன் இருக்கிறார்!](https://minnambalam.com/k/2019/06/10/20)

**

**

[பொதுவெளியில் எம்.எல்.ஏ.க்கள் கருத்து சொல்வதா? எடப்பாடி, பன்னீர்](https://minnambalam.com/k/2019/06/09/49)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share