விழுப்புரத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுக கூட்டணிக் கட்சியினர் கலப்படப் பிரதமரைத்தான் உருவாக்குவார்கள்” என்று விமர்சனம் செய்தார்.
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். விமர்சனங்களுக்கும், பதிலடிகளுக்கும் பஞ்சமில்லாமல் பிரச்சாரங்கள் நகர்ந்துகொண்டிருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சிக்க, பிரதமர் மோடியைப் புகழ்ந்தும் திமுக கூட்டணியைக் குற்றம்சாட்டியும் முதல்வர் பதிலடி கொடுக்கிறார்.
விழுப்புரத்தில் நேற்று (மார்ச் 29) பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “திமுக என்றால் அராஜக கட்சி என்றே மக்கள் நினைக்கிறார்கள். கடந்த தேர்தல் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்தான் 39 தொகுதிகளையும் வென்றது. 2014 தேர்தலில் அதிமுக கூட்டணியும், பாஜக கூட்டணியும் தனித்தனியாக பெற்ற வாக்குகளும் திமுக கூட்டணியைவிட அதிகம். ஆகவே அதிமுக கூட்டணி 40க்கு 40 இடங்களிலும் வெற்றிபெறும்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “மதிமுகவிலிருந்து வைகோ ‘ம’வை மட்டும் எடுத்துவிட்டு திமுக என்று வைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அவர் கட்சியை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டார். ஒரு கட்சியை வைத்துக்கொண்டு அடுத்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பதவி வெறிதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உள்ளது. அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக யாரும் கொள்கையை விட்டுவிட மாட்டார்கள். அதேபோல விசிகவும் தனது கட்சியை அடமானம் வைத்துவிட்டுதான் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது” என்று திமுக கூட்டணிக் கட்சிகளைக் கடுமையாக சாடினார்.
மேலும், “விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் நிற்கிறார், அக்கட்சி வேட்பாளர் இங்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறார். இது என்ன கலப்படக் கட்சியா? இவர்களெல்லாம் கூட்டணி வைத்துக் கலப்படப் பிரதமரைத்தான் உருவாக்குவார்கள்” என்றும் விமர்சித்தார்.
நாடு பாதுகாப்பாக இருக்க மோடிதான் பிரதமராக வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமி, “எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் மாநிலத்துக்கு ஒரு பிரதமர் வேட்பாளர் இருக்கிறார். அனைத்து விவகாரங்களுக்கும் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள், தங்களுக்குள் ஒரு பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியவில்லை. அப்படியெனில் அவர்களால் நாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
திமுக கூட்டணிக் கட்சிகள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதைப் பற்றி பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவதைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் திமுக கூட்டணிக் கட்சியினர்.�,