கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவே தினகரன் பொதுக்கூட்டங்களை நடத்திவருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த தினகரன், அதிமுக அரசையும், ஆட்சியாளர்களையும் கடுமையாக விமர்சித்துவருகிறார். பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பொதுக் கூட்டங்கள், நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுவருகிறார். இந்த நிலையில் சில நாட்களாக அமைச்சர்களுக்கும் தினகரனுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய தினகரன், முதல்வராக வேண்டும் என்று பன்னீர்செல்வம் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில் சென்னை திருவொற்றியூரில் இன்று (செப்டம்பர் 3) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தினகரன் போன்ற காளான்கள் அவ்வப்போது முளைப்பார்கள். கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடத்தும் வேலைகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார். தினகரன் பகல் கனவில் சஞ்சரிக்கிறார். சொப்பனத்தில் காணும் அரிசி சோற்றுக்கு உதவாது என்று கூறுவார்கள். கடலைத் தாண்ட ஆசை இருக்கலாம். ஆனால் கால் இருக்க வேண்டும். முதலில் வாய்க்கால் தாண்டப் பார்க்க வேண்டும். வாய்க்கால் தாண்டவே வக்கில்லாதவர்கள் சீட் பிடிப்பார்கள் என்பது உலக அதிசயம்” என்று விமர்சித்தார்.
“மத்திய அரசிடமிருந்து 17 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வர வேண்டியது இருக்கிறது. அதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாங்கித் தர வேண்டும். அதனை வாங்கித் தந்தால் அது அவர் தமிழகத்துக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும்”என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.�,