~கர்நாடக உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் வெற்றி!

Published On:

| By Balaji

கர்நாடக உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக, மஜத ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

கர்நாடகாவில் 3 மாநகராட்சிகள், 29 நகராட்சிகள், 53 பேரூராட்சிகள், 20 நகரப் பஞ்சாயத்துகள் ஆகிய 105 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று (செப்டம்பர் 3) அறிவிக்கப்பட்டன. 2 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 2662 இடங்களில் காங்கிரஸ் 982 இடங்களிலும் பாஜக 929 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 375 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பகுஜன்சமாஜ் கட்சிக்கு 13, பிற கட்சிகளுக்கு 34, சுயேச்சைகளுக்கு 329 இடங்கள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 10 மாவட்டங்களிலும் பாஜக 7 மாவட்டங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஷிமோகா மாநகராட்சியில் பாஜக பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. தும்கூர் மற்றும் மைசூரு மாநகராட்சிகளில் பாஜக அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும் காங்கிரஸ் – மஜத கூட்டணி மெஜாரிட்டியை பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர் குமாரசாமி, “நகர்ப்புற மக்கள் பாஜகவுக்கே வாக்களிப்பார்கள். தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி, நகர்ப்புற மக்களுக்கும் காங்கிரஸ்-மஜத இணைந்த கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் நிறுவனருமான தெவகௌடா கூறுகையில், “நாங்கள் வென்றுள்ளோம். பாஜகவைத் தொலைவில் வைக்க, காங்கிரஸ் மற்றும் மஜத இணைந்து செயல்படும்” என்று குறிப்பிட்டார்.

”நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், காங்கிரஸ்- மஜத கூட்டணி காரணமாக நாங்கள் விரும்பியவாறு செயல்பட முடியவில்லை. தேர்தல் முடிவுகள் திருப்திகரமாக இல்லை. கட்சி எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளது” என்று பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share