கர்நாடகா: பிபிசி பெயரில் போலி கருத்துக் கணிப்பு!

public

நாட்டிலேயே முதல் முறையாகக் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போலிச் செய்திகளைத் தடுக்கத் தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதற்காகத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவான, எதிரான போலி செய்திகளைக் கண்டறிந்துவருகிறது.

இந்நிலையில் போலிச் செய்திகளைவிட, பிரபல செய்தி நிறுவனங்களின் பெயரால் போலிக் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டுக் கர்நாடக மக்களைக் குழப்பிவருகின்றன. இந்த மோசடியின் ஒரு பகுதியாக பாஜகவுக்கு ஆதரவான கருத்துக் கணிப்பு ஒன்று பிரபல செய்தி நிறுவனமான பிபிசியின் பெயரால் வெளியிடப்பட்டது இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஜன் கி பாத்’ அதாவது மக்கள் குரல் என்ற பெயரில் பிபிசி செய்தி நிறுவனத்தின் இலச்சினையோடும், பிபிசி.காம் என்ற முகவரியிடப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக சமூக தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவியது.

அந்தக் கருத்துக் கணிப்பின்படி பாஜக 135 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், மற்றவர்கள் 19 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்தக் கருத்துக் கணிப்பில் இடம்பெற்றுள்ள குறிப்பில், “மாநிலம் முழுதும் 10 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் கர்நாடகத்தில் காங்கிரசைவிட பாஜகவே தனிப்பெரும் கட்சியாக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் அந்தக் கருத்துக் கணிப்பின்படி மொத்தத் தொகுதிகளின் எண்ணிக்கை 234 வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் மொத்தமுள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 224தான். இந்தக் கணக்கிலேயே இது போலிக் கருத்துக் கணிப்பு என்று தெரியவருகிறது. ஆனால் மேலோட்டமாகவும் அவசரமாகவும் இணையத்தில் வாசிக்கும் பலருக்கு இந்தக் கருத்துக் கணிப்பு பாஜகவே ஜெயிக்கும் என்ற ஒரு தோற்றத்தை பிபிசியின் பெயரால் ஏற்படுத்தி வந்திருக்கிறது.

‘ஆல்ட் நியூஸ்’ என்ற போலிச் செய்திகளைக் கண்டுபிடிக்கும் நிறுவனம்தான் மேற்கண்ட இந்த சர்வே போலியானது என்று கண்டறிந்தது. பிபிசி செய்தி நிறுவனம் இதுபோன்ற ஒரு கருத்துக் கணிப்பைக் கர்நாடகத்தில் நடத்தவே இல்லை என்றும் ஆல்ட் நியூஸ் உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும் பிபிசியின் இணைய தளப் பக்கத்திலும் இப்படி ஒரு கருத்துக் கணிப்பு பற்றிய செய்தி இடம்பெற்றிருக்கவில்லை.

ரோஹின் தர்மகுமார் என்ற பத்திரிகையாளர் இந்த போலிக் கருத்துக் கணிப்பு பற்றித் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தக் கருத்துக் கணிப்பு எனது இன்ஜினியரிங் வகுப்புத் தோழர்களுக்கான வாட்ஸ் அப் க்ரூப்பில் பகிரப்பட்டிருந்தது. இது ஒரு போலியான கருத்துக் கணிப்பு. இணையத்தில் படித்தவர்களைக்கூட நம்ப வைக்கும் இதுபோன்ற போலியான செய்திகள் எப்படியெல்லாம் பரவுகின்றன?’’ என்று ஆச்சரியம் வெளியிட்டிருக்கிறார்.

இந்தத் தகவல் பிபிசி தலைமையகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து பிபிசியின் டிஜிட்டல் எடிட்டர் ட்ரஷர் பராட் நேற்று (மே 7) தனது ட்விட்டர் பதிவில், “பிபிசியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி இன்னொரு போலியான சர்வே பற்றிய செய்தி இணையத்தில் பரவுகிறது. பிபிசி செய்தி நிறுவனம் கர்நாடகத் தேர்தல் பற்றி எந்தக் கருத்துக் கணிப்பும் நடத்தவில்லை’’ என்று தனது மறுப்பைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கருத்துக் கணிப்பை பிபிசியின் பெயரில் போலியாக வெளியிட்டது பாஜகவைச் சேர்ந்தவர்கள்தான் என்று கர்நாடகப் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கர்நாடகத் தேர்தலில் இதுவரை நான்கு செய்தி நிறுவனங்களே கருத்துக் கணிப்புகள் நடத்தி அறிவித்துள்ளன. டைம்ஸ் நவ்- விஎம்ஆர், ஏபிபி-சிஎஸ்டிஎஸ், இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தொங்கு சட்டமன்றமே கர்நாடகத்தில் அமையும் என்று கணிக்கப்பட்டது. சி ஃபோர் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் 118 முதல் 128 சீட்டுகள் வரை பெற்று காங்கிரஸே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் இந்தப் போலி கருத்துக் கணிப்பு பாஜக வெற்றி பெறும் என்ற தகவலை பிபிசியின் பெயரில் வெளியிட்டு கர்நாடக வாக்காளர்களை நம்பிக்கை மோசடி செய்திருக்கிறது. வாட்ஸப்பில் வரும் தகவல்கள் அனைத்தையும் விசாரணைக் கண் கொண்டு பார்க்க வேண்டியது அவசியம் என்பதை இந்த போலிக் கருத்துக் கணிப்பு மேலும் உறுதிப்படுத்துகிறது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.