காதலர் தினத்தன்று குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது கர்நாடக தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான சங்கம்.
காதலர் தினமானது உலகமெங்கும் நாளை (பிப்ரவரி 14) கொண்டாடப்படவுள்ளது. கல்லூரிப் பருவத்தினர் மட்டுமல்லாமல் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரிடமும் இந்த கொண்டாட்டம் பரவலாகக் காணப்படுகிறது. தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்களினால் மாணவ, மாணவியரின் மனநிலை பாதிப்படையக் கூடாது என்று பெற்றோர்கள் கவலைப்படுவது அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள காதலர் தின கொண்டாட்டத்தில் தங்களது குழந்தைகள் ஈடுபடுகிறார்களா என்று சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கவனிக்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது கர்நாடக தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கான சங்கம். இதில் அங்கம் வகிக்கும் தனியார் பள்ளிகளுக்கு இது தொடர்பான அறிவுரை அனுப்பப்பட்டுள்ளது.
”குழந்தைகள் பணம் எடுத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது. அவர்களது பேக்குக்களில் பரிசுகள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட்கள், சிவப்பு நிறப் பொருட்கள் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும். வண்ண ஆடைகளை பேக்கில் வைத்துச் செல்வது. பொய் சொல்லி ஷாப்பிங் மால் செல்வது போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிப்பருவத்தில் வரும் காதலினால் உடல் மற்றும் மன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்றும், மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களும் அதன் விளைவாக நடக்கும் குற்றங்களும் பெருகியுள்ளன என்றும், இளம் மனங்களில் தேவையற்ற விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவே இந்த அறிவுரை வழங்கப்படுகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,