கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் பேரரசு கட்சித் தலைவர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று (செப்டம்பர் 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெங்களூருவில் வாழும் தமிழர்களின் அழைப்பின் பேரில் கடந்த இரண்டு நாட்களாக நான் பெங்களூரு சென்று இருந்தேன். கர்நாடகாவில் சுமார் ஒன்றரை கோடி தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கர்நாடகாவில் சாலைகளில் செல்லும்போது தமிழ் பேசினால் அவர்களுக்கு பொது இடங்களில் தமிழ் பேசக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது. பேருந்துகளில் தமிழ்ப் பத்திரிகைகள் படித்தால் கன்னடப் பத்திரிகைகள்தான் படிக்க வேண்டும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்களில் கோபுரத்தின் மேலுள்ள உள்ள ஓம், சிவன் உள்ளிட்ட எழுத்துகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் என்ன வெறி?” என்று கவுதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் எல்லாம் இழுத்து மூடப்படுகிறது. இது நேர்மையற்ற ஒரு போக்கு. இதில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் நீக்கப்பட்ட ஓம் உள்ளிட்ட எழுத்துகள் மீண்டும் வைக்கப்பட வேண்டும். பிற மாநிலத்தில் உள்ள தமிழர்களுக்காகத் தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
கீழடி அகழ்வாய்வு குறித்துப் பேசிய அவர், “உத்தரப் பிரதேசத்தில் சில தொன்மையான தடயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அங்கு ஆய்வு நடைபெறும் 28 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வாங்கிக் கொண்டது. அதைப் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவித்து அகழ்வாய்வு செய்து வருகிறது. ஆனால் கீழடி அகழ்வாய்வை மத்திய அரசு கைகழுவி விட்டுச் சென்றுவிட்டது. இன்னும் 110 ஏக்கர் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வை செய்தால் உலக நாகரிகத்தின் தொட்டில் கீழடி ஆதிச்சநல்லூர் என்பது தெரியவரும். இந்த இனம் தலையெடுத்து விடுமோ என்பதற்காகத்தான் இவர்கள் களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.
இறுதியாக விக்கிரவாண்டி தொகுதியில் தமிழ் பேரரசு கட்சி போட்டியிடும் என்றும் அதற்கான பணிகள் தொடங்க இருப்பதாகவும் கவுதமன் குறிப்பிட்டார்.�,