கர்நாடகம்: நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் தொடங்கியது!

Published On:

| By Balaji

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா வழக்கில் நேற்று (ஜூலை 17) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், இன்று (ஜூலை 18) கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும், அதில் கலந்துகொள்ளும்படி எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தமுடியாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கர்நாடக சட்டமன்றம் கூடியது. இதை முன்னிட்டு சட்டமன்றத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் 101 விழுக்காடு நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர்களுக்கு 100க்கும் குறைவான உறுப்பினர்களே உள்ளனர். எங்களுக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவுள்ளது. அவர்கள் தோல்வியடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

சுமார் 11.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய முதல்வர் குமாரசாமி, “ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். என்னால் கூட்டணி அரசை நடத்த முடியுமா இல்லையா என்ற கேள்விக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை. சபாநாயகரின் பொறுப்பையே சில எம்.எல்.ஏக்கள் ஆபத்தில் தள்ளியுள்ளனர் என்பதை அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் காட்டுகின்றன” என்று பேசினார்.

விவாதத்தை விரைந்து முடித்து நம்பிக்கை வாக்கெடுப்பை தொடங்கும்படி பாஜக உறுப்பினர்கள் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து பேசிய குமாரசாமி, “விவாதத்தை ஏன் உடனடியாக முடிக்க வேண்டுமென பாஜக விரும்புகிறது? நம்பிக்கை வாக்கெடுப்புக்கான காரணங்கள் குறித்து இன்னும் நாம் விவாதிக்கவில்லை. எனக்கும் எனது அமைச்சர்களுக்கும் சுய மரியாதை உண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு எப்படி என்னால் விவாதிக்காமல் இருக்க முடியும்? அரசை நிலைகுலைய வைத்ததற்கு யார் பொறுப்பு?” என்று கேள்வியெழுப்பினார்.

பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை குமாரசாமி தொடங்கி வைத்தார். தனது தலைமையில் செயல்படும் அமைச்சரவை மீது அவைக்கு நம்பிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார். 19 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு ஒரே நாளில் நிறைவுசெய்யப்பட வேண்டுமென்று சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா வலியுறுத்தினார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share