கர்நாடகம்: எம்.எல்.ஏக்கள் ராஜினாமா – நாளை தீர்ப்பு!

Published On:

| By Balaji

கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா வழக்கு இன்று (ஜூலை 16) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.எல்.ஏக்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி “கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தபிறகும் அவர்கள் வாக்களிக்க கட்டாயப்படுத்தப்படலாம். எம்.எல்.ஏக்களை வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்தலாமா? ஒரு மனிதன் தனது விருப்பப்படி செயல்பட விடாமல் தடுத்து அவரை சபாநாயகர் கட்டாயப்படுத்துகிறார்.

நான் என்ன செய்ய வேண்டுமென நினைக்கின்றேனோ அதை செய்வது எனது அடிப்படை உரிமை. சபாநாயகர் ராஜினமாவை ஏற்கவில்லை என்பதற்காக நான் தடுக்கப்படக்கூடாது. ராஜினாமாவிற்கான காரணம் என்னவென கேள்வியெழுப்புவது அர்த்தமற்றது. எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை கவிழ்ப்பதற்காகவே தகுதிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் இணைந்து சதி செய்கின்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்தார்.

எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்களுக்கு சபாநாயகர் அப்பாய்ண்ட்மெண்ட் வழங்கவில்லையா என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வியெழுப்பினார். அதற்கு, சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “சபாநாயகரிடம் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்கப்படவே இல்லை. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு முன்பாகவே அவர்களை தகுதிநீக்கம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யபட்டுவிட்டன. எம்.எல்.ஏக்கள் எப்படி ராஜினாமா செய்து தகுதிநீக்கத்திலிருந்து தப்ப முடியும்?

எம்.எல்.ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் கூறுவது அடிப்படையில் தவறானது. தகுதிநீக்க மனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் ராஜினாமா கடிதங்கள் வரவில்லை. ” என்று தெரிவித்தார். அப்போது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “நீதிமன்ற உத்தரவின் பேரில் எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்தித்தபோது அவர் ஏன் முடிவெடுக்கவில்லை? அவர் எப்போது விரும்புவாரோ அப்போதுதான் முடிவெடுப்பார் என நீதிமன்றத்திற்கு சொல்ல வருகிறாரா?” என்று கேள்வியெழுப்பினார்.

அப்போது, சபாநாயகருக்கு காலக்கெடு விதிப்பதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. இடைக்கால சபாநாயகரை நியமிக்கவும் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு இடைக்கால சபாநாயகரை நீதிமன்றம் நியமித்தது. அப்போது, சூழல் உங்களுக்கு சாதகமாக இருந்ததால் நீங்கள் ஆட்சேபிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

பின்னர், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்தும் தகுதிநீக்கம் குறித்தும் முடிவெடுக்க நாளை வரை கால அவகாசம் அளிக்கும்படி சபாநாயகர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிந்தபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி தரப்பில் வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜரானார். அவர், “காலக்கெடு விதித்து சபாநாயகரை முடிவெடுக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

இது சபாநாயகருக்கும் நீதிமன்றத்திற்கும் இடையேயான பிரச்சினையல்ல. முதலமைச்சருக்கும், ஆட்சியைக் கவிழ்த்து முதலமைச்சராக நினைக்கும் மற்றொருவருக்கும் இடையேயான பிரச்சினையாகும். எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவே முறையாக இல்லாதபோது, சபாநாயகருக்கு நீதிமன்றத்தால் காலக்கெடு விதிக்க முடியாது. முடிவெடுக்கப்பட்ட பிறகே நீதிமன்றம் தலையிட முடியும்” என்று வாதிட்டார்.

அதற்கு எம்.எல்.ஏக்கள் தரப்பு வழக்கறிஞர், “சபாநாயகர் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக பாகுபாட்டுடன் செயல்படுவதால் ராஜினாமா செய்வதற்கான அடிப்படை உரிமை எம்.எல்.ஏக்களுக்கு இருக்கிறது” என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பு நாளை (ஜூலை 17) காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தனர்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[என் மகனாகப் பார்க்காதீர்கள்… ‘திமுக’காரனாகப் பாருங்கள்!](https://minnambalam.com/k/2019/07/16/27)**

**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share